படத்துக்கு இசையமைப்பதாக ஒப்புக் கொண்டு, அட்வான்ஸ் வாங்கிய பிறகு, அந்தப் படத்திலிருந்து விலகியதற்காக தயாரிப்பாளரிடம் மன்னிப்பு கேட்டார் இசையமைப்பாளர் அனிருத்.
தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார் அனிருத். அவர் இசையமைத்து ஒரு படம் வெளியான உடனே, ஆன்ட்ரியாவுக்கு லிப் டு லிப் கிஸ்ஸடித்த படத்தை வெளியிட்டு சர்ச்சையில் மாட்டினார்.
அடுத்து பெண்களை ஆபாசமாக சித்தரித்து வீடியோ பாடல் உருவாக்கியதற்காக அவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
அடுத்து, இப்போது தயாரிப்பாளரிடம் பிரச்சினை.
ரேடியன்ஸ் மீடியா என்ற நிறுவனத்துக்காக வாயை மூடி பேசவும் என்ற படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் பாலாஜி மோகன். துல்கர் சல்மான் - நஸ்ரியா நடிக்கும் இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக அனிருத்தை ஒப்பந்தம் செய்து அட்வான்ஸும் கொடுத்திருந்தார் தயாரிப்பாளர் வருண் மணியன்.
ஆனால் பின்னர் இசையமைக்காமல் விலகிக் கொண்டார் அனிருத். இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் அனிருத் மீது புகார் கொடுத்தார் வருண் மணியன்.
இதைத் தொடர்ந்து, உடனடியாக அட்வான்ஸை திருப்பித் தருவதாகக் கூறியுள்ள அனிருத், தனது தவறுக்காக பகிரங்க மன்னிப்பு கோருவதாகவும் கடிதம் அனுப்பியுள்ளார்.
தனது கடிதத்தில், தொடர்ச்சியான வேலைப் பளு காரணமாக வாயை மூடி பேசவும் படத்துக்கு இசையமைக்க முடியவில்லை என்றும், இதற்காக மன்னிப்பு கோருவதாகவும் எழுதியுள்ள அனிருத், அடுத்த படத்தில் பணியாற்ற முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படத்துக்கு ரூ 5 லட்சத்தை அட்வான்ஸாக பெற்றிருந்தார் அனிருத். அந்தத் தொகையை உடனடியாக திருப்பிக் கொடுத்துவிடுவதாகக் கூறியுள்ளார் அவர்.
Post a Comment