நட்பின் மேன்மையை உணர்த்தும் வகையில் தயாராகி வரும் புதிய திரைப்படத்துக்கு "ஒவ்வொரு நண்பனும் தேவை மச்சான்" என்று பெயரிடப்பட்டுள்ளது. இது முன்னணி காமெடியன் சந்தானம் ஒரு படத்தில் சொல்லும் வசனம் என்பது நினைவிருக்கலாம்.
'எஸ்.எம்.பி. பிக்சர்ஸ்' நிறுவனத்துக்காக ஆம்பூர் எஸ். மகேந்திரன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். இதில் கதாநாயகனாக புதுமுகம் மிதுன் அறிமுகமாகிறார்.
'பாடி பில்டிங்' சாம்பியனான மிதுன் தற்போது மற்றொரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். 'இருக்கு ஆனா இல்ல' திரைப்படத்தில் நடித்துள்ள மனிஷாஸ்ரீ இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் 'சொல்லுங்க டாடி சொல்லுங்க' புகழ் 'சேட்டை' செந்தில், சூரியன் எஃப்.எம். தொகுப்பாளரான அசார், பாண்டு, சபீதா ஆனந்த், 'நாடோடிகள்' அர்ச்சனா, சிந்து போன்ற நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
படத்துக்கு எச். ஷாஜகான் இசையமைத்துள்ளார். படத்தில் ஆறு பாடல்கள். முழுவதும் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன. பாடல்களை ராஜ ராஜ ராஜன் மற்றும் நிலா ரசிகன் எழுதியுள்ளனர். சுரேஷ் தேவ் நடனம் அமைத்துள்ளார்.
துபாய் நாட்டில் பல்வேறு குறும்படங்கள் மற்றும் விளம்பரப் படங்களை இயக்கியவரான ஜி. சலீம் "ஒவ்வொரு நண்பனும் தேவை மச்சான்" படத்தின் ஒளிப்பதிவை கவனித்துள்ளார்.
தமிழ் இணைய வாசகர்கள் மத்தியில் 'அப்பாவி தங்கமணி' என்ற பெயரில் புகழ் பெற்ற எழுத்தாளரான புவனா கோவிந்த் இந்த திரைப்படத்தின் கதையை எழுதியுள்ளார். அதற்கு திரைக்கதை அமைத்து வசனங்கள் எழுதி இயக்கி வருபவர், ராஜ ராஜ ராஜன். இவர், தொலைக்காட்சி செய்தித் துறையில் நெடிய அனுபவம் கொண்டவர்.
"ஒவ்வொரு நண்பனும் தேவை மச்சான்" படப்படிப்பு சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பல இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திரைப்படத்தின் முன்னோட்டப் பாடல் புத்தாண்டு தினத்தன்று 'யூ-ட்யூப்' இணையத்தில் "ANTI-LOVE ANTHEM" என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.
Post a Comment