சென்னை: நடிகை குஷ்புவின் புதிய ஆடி க்யூ5 காரின் பின்பக்கம் மீது மோதியது மாநகரப் பேருந்து. இதில் அந்தக் காரின் பின்பக்கம் அப்பளமாக நொறுங்கியது.
குஷ்புவுக்கு அவர் கணவர் இயக்குநர் சுந்தர் சி பரிசாகக் கொடுத்த கார் இந்த ஆடி க்யூ 5.
இந்தக் காரில் நேற்று பயணம் செய்த குஷ்பு, ஒரு சிக்னலில் வண்டியை நிறுத்தி, பச்சை விளக்குக்காகக் காத்திருந்தார்.
அப்போது சற்று வேகமாக வந்த மாநகரப் போருந்து டமால் என குஷ்பு காரின் பின்பக்கத்தில் மோதியது. இதில் அந்தக் காரின் பின்பக்கம் நொறுங்கியது. பின் பக்க விளக்குகள் அனைத்தும் நொறுங்கின. காரின் பம்பர் போன்றவையும் நசுங்கின.
இந்த விபத்து குறித்து தனது ட்விட்டரில் குஷ்பு கூறுகையில், "வாவ்.. என்னா ஒரு இடி.. சிக்னலில் ரெட் லைட்டுக்காகக் காத்திருந்த போது மாநகரப் பேருந்து என் கார் மீது ஒரு சிக்ஸ் அடித்தது போல மோதி, பின்பக்க விளக்குகள், பம்பரைப் பதம் பார்த்துவிட்டது. அடுத்து என்ன... அந்த ட்ரைவர் எனக்கு அட்வைசும் எச்சரிக்கையும் கொடுத்துவிட்டுப் போகப் போகிறார்..." என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "காரை இடித்ததும் முதல் வேலையாக பஸ் நம்பர் பிளேட் மற்றும் ரூட் பிளேட்டை நீக்கிவிட்டார்கள். ட்ரைவரிடம் லைசென்ஸ் கூட இல்லை. யாரும் இதெல்லாம் கேட்பதில்லை என்கிறார்கள். ஏன்? நாம் இப்படி வந்தால் அனுமதிப்பார்களா?" என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
"எனக்கு ஒன்றுமில்லை, நலமாக உள்ளேன். ஆனால் இந்தக் கார் என் கணவர் சுந்தர் எனக்கு பரிசாகக் கொடுத்தது. அதை இப்படி நொறுக்கிவிட்டதை நினைத்து என் இதயம் ரத்தம் வடிக்கிறது. விபத்து குறித்து அறிந்ததும் என்னை நலம் விசாரித்த நண்பர்களுக்கு நன்றி", என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment