சென்னை: சலங்கை ஒலி, பத்ரகாளி உள்பட பல படங்களில் எடிட்டராக பணியாற்றியவரான மறைந்த ராமசாமியின் மகன் பாலாஜியை சிலர் கடத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாலிகிராமத்தில் வசித்து வந்தவர் ராமசாமி. இவர் இறந்து விட்டார். இவரது மகன் பாலாஜி. இவர் ஐஸ் கட்டிகளை மொத்தமாக வாங்கி சில்லறை வியாபாரம் செய்து வருகிறார். 29 வயதான இவர் 2 நாட்களுக்கு முன்பு இரவில் ஏடிஎம்மில் பணம் எடுக்கப் போயுள்ளார். ஆனால் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில் அவரது செல்போனிலிருந்து அவரது அண்ணன் வெங்கடேசனுக்கு, நான் ஆபத்தில் இருக்கிறேன், காப்பாற்று என்று கூறி எஸ்எம்எஸ் வந்துள்ளது. அடுத்த சில நிமிடங்களில் தனது தம்பி திரவியத்தின் செல்போனைத் தொடர்பு கொண்ட பாலாஜி, நான் ஏ.டி.எம்.மிலிருந்து பணம் எடுத்துக்கொண்டு வெளியே வந்த போது 4 பேர் என்னை காரில் கடத்தி வந்து விட்டனர். நான் எங்கு இருக்கிறேன் என்று தெரியவில்லை. கார் தற்போது ஆந்திரா நோக்கி செல்வது போல் உணர்கிறேன். என்னை கடத்தியவர்கள் இந்தியில் பேசுகிறார்கள். அவர்கள் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள். என்னை காப்பாற்று என்று கூறியுள்ளார். அதன் பின்னர் போன் துண்டிக்கப்பட்டு விட்டதாம்.
அதன் பின்னர் போன் சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது. இதையடுத்து போலீஸில் அவர்கள் புகார் கொடுத்தனர். போலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு தற்போது பாலாஜி மீதே சந்தேகம் வந்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் ஏகப்பட்ட கடனில் இருந்து வருகிறாராம். எனவே கடன்காரர்களிடமிருந்து தப்ப நாடகம் போடுகிறாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
Post a Comment