சென்னை: மூன்று பேரின் தூக்கை ரத்து செய்து தீர்ப்பு வந்த மறுநாளே அவர்களை விடுதலை செய்ய உத்தரவிட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி என இயக்குநர்கள் சேரன், வ கவுதமன் ஆகியோர் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து இன்று அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
மூவரின் விடுதலைக்காக ஒரு இனம் தொடர்ந்து போராடியது. சில தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தார்கள். நிறைய அமைப்புகள் விடுதலை வேண்டி போராட்டம் நடத்தின.
செங்கொடி என்ற இளம்வயது தங்கை தீக்குளித்தாள். இதெல்லாம் தாண்டி ஒரு தாய் தன் மகனை இளம் வயதில் எதெல்லாம் அனுபவிக்க வேண்டுமோ அதையெல்லாம் தொலைத்துவிட்ட மகனை மீட்க 23 வருடங்கள் தொடர்ந்து சிறைக்கும் வீட்டுக்கும் நடந்திருக்கிறாள்.
அது எவ்வளவு துயரம் எவ்வளவு கடினம் என்று யாருக்கும் தெரியாது. தன் மகன் தனக்கு மீண்டும் வருவான் உயிரோடு என்ற நம்பிக்கையில் காத்திருந்த பார்க்கும் தலைவர்களிடம் எல்லாம் கதறி அழுத அந்த தாயின் உறுதிக்கு கிடைத்த வெற்றி என்பதே உண்மை.
எத்தனை முறை நடந்தார், எத்தனை மைல் நடந்தார் என்பதை யார் அறிவார்... இரண்டு வருடங்களுக்கு முன்பு மூவருக்கும் தூக்கு உறுதி என கோர்ட்டும் மத்திய அரசும் உத்தரவிட்டபோது இந்த தாய் எப்படி துடித்தாள் என்பதை அருகில் இருந்து பார்த்தேன்...
கிட்டதட்ட மரணக்குழிக்கு அருகில் சென்று வந்திருக்கும் மூவரின் உயிரையும் மீட்டுகொண்டுவந்த அந்த தாய்க்கு முதல்வணக்கம்.
இதில் பங்கெடுத்த அனைத்து தமிழர்களுக்கும் தலைவர்களூக்கும் நன்றிகள்....
முக்கியமாக தீர்ப்பு வந்த மறுநாளே விடுதலை அறிவித்து இனத்தின் மானம் காத்த மூவரின் உயிர்காத்த தமிழக முதல்வருக்கும் நன்றி!
-இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
Post a Comment