சென்னை: சமீபத்தில் வெளியான கோலி சோடா படத்தைப் பார்த்துப் பாராட்டு தெரிவித்துள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
தமிழில் வெளியாகும் புதுப் படங்களை உடனுக்குடன் பார்க்கும் ரஜினி, சம்பந்தப்பட்ட கலைஞர்களை உடனுக்குடன் போனிலோ நேரிலோ அழைத்துப் பாராட்டத் தவறுவதில்லை.
சமீபத்தில் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், விஜய் மில்டன் எழுதி இயக்கிய கோலி சோடா படம் வெளியானது. வித்தியாசமான கதைக் களத்தில் உருவாக்கப்பட்டிருந்த இந்தப் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு பிரத்தியேகமாக போட்டுக் காட்டினர்.
படம் பார்த்த அவர், மிகவும் வித்தியாசமான முயற்சி இது என்றதோடு, மிக அருமையாக உருவாக்கியிருக்கிறீர்கள் என்றார்.
'ஆமா..எப்டி.. அவ்ளோ கூட்டமா இருக்கும் கோயம்பேடு மார்க்கெட்ல படம் பிடிச்சீங்க? அதுவும் இந்தப் பசங்கள ஒரிஜினல் கோயம்பேடு தொழிலாளர்களாவே மாத்தியிருக்கீங்க.. சூப்பர்' என்றார் இயக்குநர் விஜய் மில்டனிடம். மேலும் தயாரிப்பாளர் லிங்குசாமிக்கும் போன் செய்து 30 நிமிடத்துக்கும் மேல் பேசினார் ரஜினி.
ஏற்கெனவே திருப்பதி பிரதர்ஸ் தயாரித்த வழக்கு எண் 18/9, கும்கி ஆகிய படங்களையும் ரஜினி பார்த்து பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment