பெங்களூர்: மறைந்த நகைச்சுவை மேதை என்.எஸ்.கிருஷ்ணனின் மகன் கிட்டப்பா பெங்களூரில் இன்று மரணமடைந்தார்.
உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டதால் ஆம்புலன்ஸை வரவழைத்தனர். ஆனால் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கிக் கொண்டு வர முடியாமல் போனதால் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மரணமடைந்த கிட்டப்பாவுக்கு வயது 72 ஆகும். ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி ஆவார். பெங்களூரில் தனது மனைவி இந்திராவுடன் வசித்து வந்தார்.
என்எஸ்கேவின் மாபெரும் ஹிட் படமான நல்லதம்பி படத்தில் கிட்டப்பாவும் நடித்திருந்தார்.
அவருக்கு நேற்று முன்தினம் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனைவி இந்திரா, ஆம்புலன்ஸுக்குப் போன் செய்தார். ஆனால் ஆம்புலன்ஸ் வரும் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் இருந்ததால் ஆம்புலன்ஸால் விரைவாக வர முடியாமல் போனது.
இந்த நிலையில் மூச்சுத் திணறல் அதிகமாகி கிட்டப்பா மரணமடைந்து போனார். ஒரு அரை மணி நேரத்திற்கு முன்பு ஆம்புலன்ஸ் வந்திருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்கலாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
கிட்டப்பாவின் மகள் தேன்மொழி அமெரிக்காவில் இருக்கிறார். அவர் பெங்களூர் வந்துள்ளார். இன்று இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Post a Comment