சென்னை: செக் மோசடி வழக்கில் வரும் 11ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நடிகை புவனேஸ்வரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ககன் போத்ரா என்பவர் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,
'கொஞ்சம் சிரிப்பு கொஞ்சம் கோபம்' என்ற திரைப்படத்தில் நடித்தவர் சாலிகிராமத்தை சேர்ந்த புவனேஸ்வரி என்ற அனு. இவரும், அவரது தாய் சம்பூரணமும் ஒரு சொத்து மீது 45 லட்ச ரூபாய் கடன் வாங்கினர். அதற்காக அவர்கள் கொடுத்த காசோலைகள் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் திரும்பியது. இது தொடர்பாக அவர்கள் எந்த பதிலும் சொல்லவில்லை. எனவே, அவர்கள் மீது செக் மோசடி வழக்கு பிரிவின் கீழ், நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்திருந்தார்.
இந்த மனு 8வது பெருநகர மாஜிஸ்திரேட் ஜெயஸ்ரீ முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் புவனேஸ்வரி மற்றும் அவரது தாயார் இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். ஆனால் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி புவனேஸ்வரி மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்நிலையில் வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
மாஜிஸ்திரேட் வழக்கை வரும் 11ம் தேதிக்கு தள்ளி வைத்தார். மேலும் புவனேஸ்வரி தனது தாயுடன் அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.
Post a Comment