சென்னை: ரஜினியின் கோச்சடையான் படத்தின் புதிய ட்ரைலருக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மூன்று நாட்களுக்குள் 2 மில்லியன் பேர் பார்த்துள்ளனர் இந்த ட்ரைலரை.
இந்திய சினிமா ட்ரைலர் ஒன்று இத்தனை குறுகிய காலத்தில் இவ்வளவு பேரால் பார்க்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.
சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியாவின் முதல் 'அசைவு பதிவாக்க தொழில்நுட்பப்' படமான கோச்சடையான் பாடல்களும் திரையரங்க முன்னோட்டக் காட்சியும் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று வெளியாகின.
பாடல்கள் குறுந்தகடுகள் விற்பனையில் பெரிய சாதனையைப் படைத்துள்ளனண. இசைக் குறுந்தகடு விற்பனை என்பதே சுத்தமாக சரிந்து போய்விட்ட இந்த காலகட்டத்தில், கோச்சடையான் இசைத் தட்டு விற்பனை ஆடியோ மார்க்கெட்டுக்கு பெரும் ஆறுதலை அளித்துள்ளது.
இன்னொரு பக்கம் படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் அபார வரவேற்பு கிடைத்துள்ளது. முன்னோட்டக் காட்சி வெளியான மூன்று நாட்களுக்குள் இரண்டு மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
இந்த முன்னோட்டப் படம் குறித்து விமர்சனங்கள் இருந்தாலும், பெரும்பாலானோர் இந்தியாவின் முதல் மாற்றுத் தொழில்நுட்ப சினிமா முயற்சி என்று பாராட்டி வரவேற்றுள்ளனர்.
ரூ 125 கோடியில் இரண்டு ஆண்டுகளுக்குள் இப்படி ஒரு படத்தை எடுத்திருப்பது பெரிய சாதனை என திரையுலகினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
Post a Comment