ரஜினி தன் ரசிகர்களுக்காக மாநில அளவில் மாநாடு நடத்த வேண்டும் - எஸ் முத்துராமன்

|

சென்னை: ரஜினியை ஒரு முறையாவது நேரில் காண வேண்டும் என அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் தவமிருக்கிறார்கள். அவர்களுக்காக ஒரு முறை மாநில அளவில் ரசிகர்கள் மாநாடு நடத்த வேண்டும், என இயக்குநர் எஸ் பி முத்துராமன் கேட்டுக் கொண்டார்.

நேற்று சென்னையில் நடந்த கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் எஸ் பி முத்துராமன் பேசியதாவது:

சூப்பர் ஸ்டார் ரஜினியோடு அதிக நேரம் இருந்தவன் நான்தான். அவருக்கு திருமணம் நடந்தது எனது படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதுதான். அவருக்கு குழந்தைகள் பிறந்ததும் எனது படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோதுதான்...

ரஜினி தன் ரசிகர்களுக்காக மாநில அளவில் மாநாடு நடத்த வேண்டும் - எஸ் முத்துராமன்

எனக்கு பெங்களூரில் அண்ணன் சத்யநாராயணா இருக்கிறார், இங்கே சென்னையில் என் உடன் பிறக்காத அண்ணனாக எஸ்பி முத்துராமன் இருக்கிறார் என்று என்னை கவுரவப்படுத்தியிருக்கிறார் ரஜினி.

ரஜினியின் ரசிகர்களை அவர் சார்பில் இன்றைக்கும் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். அவர் சார்பில் பல ஊர்களுக்கும் போய் ரசிகர்களிடம் பேசிக் கொண்டிருப்பவன் நான்தான். ரசிகர்கள் அத்தனை பேரும் அவரை ஒரு முறையாவது நேரில் பார்த்துவிட வேண்டும் என துடிக்கிறார்கள்.

எவ்ளோ நாளைக்குதான் உங்களையே பார்ப்பது.. ரஜினி சாரை வரச் சொல்லுங்க என்று என்னிடம் கேட்கிறார்கள். இப்போது அவர்கள் சார்பாக நான் ரஜினியிடம் கேட்பது இதுதான்.. ஒரு முறை மிகப் பெரிய அளவில் ஒரு மாநில மாநாடு மாதிரி ரசிகர்கள் மாநாட்டைக் கூட்ட வேண்டும். அத்தனை ரசிகர்களையும் திருப்திப்படுத்த வேண்டும்," என்றார்.

ரஜினியும் சிரித்துக் கொண்டே அதை ஏற்றுக் கொண்டார்.

பின்னர் பேசிய சரத்குமாரும் இதே கோரிக்கையை ரஜினியிடம் வைத்தது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment