சென்னை: ரஜினி ஒரு தமிழர்... அவரைப் பற்றி இனி இந்த மாதிரி கேள்வியெல்லாம் கேட்க வேண்டிய அவசியமில்லை என்று நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் கூறினார்.
நேற்று கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் பேசிய வைரமுத்து, திடீரென பழைய விஷயங்களைக் கிளற ஆரம்பித்தார்.
ரஜினி தமிழரா என்ற கேள்வி எழுந்தபோது, தனது பாடல் எப்படி அதற்கு பதிலாக அமைந்தது என்றெல்லாம் விலாவாரியாகக் கூறினார்.
அடுத்து பேச வந்த நடிகர் சரத்குமார், எடுத்த எடுப்பிலேயே கேட்டார் இந்தப் பேச்சு இப்போது எதற்கு வந்தது? என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், "வைரமுத்து பேசியதையெல்லாம் கேட்டதும், யாராவது ரஜினி சாரைப் பார்த்து தமிழரா இல்லையான்னு இப்போ கேட்டுட்டாங்களோன்னு தோணிடுச்சி.
இந்த மாதிரியெல்லாம் இனியும் கேட்க வேண்டியதில்லை. அவர் எப்போதோ தமிழராகிவிட்டவர். எப்போதுமே தமிழர்தான். ரஜினி சார்.. யு ஆர் எ தமிழன்..!
ரஜினி சார் மாதிரி ஒரு அற்புதமான மனிதரைப் பார்க்க முடியாது. ஒரு நாள் என்னை அழைத்து, சரத், ஒரு கதை இருக்கு... கேளுங்க.. நாம சேர்ந்து நடிக்கிறோம் என்றார்.
அவர் சொன்னால் நான் எந்த வேடத்திலும் நடிப்பேன்.
கோச்சடையான் படத்தில் என்னை நடிக்க வைத்ததற்கு நன்றி. சவுந்தர்யா என்னை நடத்திய விதம்.. அந்த பண்பு.. அதெல்லாம் எங்கிருந்து வந்தவை என்பதை சொல்லத் தேவையில்லை.
அசாத்திய திறமைசாலியான சவுந்தர்யா இந்தப் படத்தில் பெரிய வெற்றியைப் பெறுவார்.
கோச்சடையான் ஒரு மிகப் பெரிய மாற்றத்தை சினிமாவில் ஏற்படுத்தும். இந்தப் படத்தைப் பார்க்கச் செல்லும் ரசிகர்கள், 'நாம் பார்ப்பது மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள படத்தை' என்ற மனநிலையோடு செல்ல வேண்டும். அதுதான் படத்தை பெரிய வெற்றி பெற வைக்கும்.
எஸ்பி முத்துராமன் அவர்கள் சொன்னதுபோல, சூப்பர் ஸ்டார் ரஜினி தன் ரசிகர்களுக்காக ஒரு பெரிய மாநாடு நடத்த வேண்டும். அவர் ரசிகன் என்ற முறையில் இதை நானும் ரஜினி சாரிடம் சொல்லிக் கொள்கிறேன். உங்கள் பிறந்த நாள் விழா கூட்டத்தில் என்னைப் பேச அழைத்து கவுரவம் தந்தீர்கள். அதேபோல இந்த ரசிகர்கள் மாநாட்டுக்கும் அழைக்க வேண்டும். அங்கும் வந்து நான் பேசுவேன்," என்றார்.
Post a Comment