கொச்சி: கேரள கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள ஷீலா தீக்ஷித்தை விமர்சித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை ரீமா கல்லிங்கல்.
மலையாளத்தில் முன்னணி நடிகையான ரீமா கல்லிங்கல், சமீபத்தில்தான் இயக்குநர் ஆஷிக் அபுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கேரள கவர்னராக இருந்த நிகில்குமார் ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய கவர்னராக ஷீலா தீட்சித் நியமிக்கப்பட்டு உள்ளார். அடுத்த வாரம் இவர் கேரள கவர்னராக பதவி ஏற்க உள்ளார். கேரளாவில் கவர்னர் பதவி ஏற்று தங்கி இருப்பதில் மகிழ்ச்சி அடைவேன் என்று ஷீலா தீக்ஷித் தெரிவித்துள்ளார்.
ஷீலாதீட்சித் டெல்லி முதல்வராக இருந்த போதுதான் அங்கு பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகம் நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
பெண்கள் மாலை 6 மணிக்கு மேல் ஏன் வெளியே போகிறார்கள்? அப்படி போவதால்தான் இதுபோல் பாலியல் வன்முறைகள் நடக்கிறது என்று ஷீலா தீட்சித் அப்போது பேசியதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. தற்போது கேரளாவுக்கு அவர் கவர்னராவதை விமர்சித்து ரீமா கல்லிங்கல் கருத்து தெரிவித்து உள்ளார்.
‘‘கேரள கவர்னராக பதவி ஏற்க ஷீலா தீட்சித் வருகிறார். இனி கேரள பெண்கள் யாரும் மாலை 6 மணிக்கு மேல் வெளியே வரக்கூடாது," என தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.
இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. காங்கிரஸ் கட்சியினர் இதற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். மற்ற அரசியல் கட்சியினரும் ரீமாவின் கருத்து அதிகப்பிரசங்கித்தனமானது என்று கூறியுள்ளனர்.
ஷீலா தீட்சித்திடம் ரீமா கல்லிங்கல் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று காங்கிரஸார் வலியுறுத்தி வருகின்றனர்.
Post a Comment