சென்னை: உலகின் முதல் 25 இசையமைப்பாளர்களுள் ஒருவராக அங்கீகரிக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் சினிமா பத்திரிகையாளர்கள்.
இசைஞானி என அழைக்கப்படும் இளையராஜா 1000 படங்களைத் தாண்டி இசையமைத்துக் கொண்டிருக்கிறார். இதோ இன்று கூட ஒரு மெகா பட்ஜெட் தெலுங்குப் படத்துக்கு இளையராஜா இசைதான் வேண்டும் என்று வந்து நிற்கிறார்கள்.
தமிழில் இந்த ஆண்டு அவர் இசையில் 15-க்கும் மேற்பட்ட படங்கள் உருவாகி வருகின்றன.
இந்த நேரத்தில், உலகின் தலை சிறந்த இசையமைப்பாளர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ள ஒரே இந்தியர் என்ற பெருமை இளையராஜாவுக்குக் கிடைத்துள்ளது. நம்பர் விளையாட்டுக்கு அப்பாற்பட்ட கலைஞர் இளையராஜா என்பது நூறு சதவீத உண்மை என்றாலும், இந்த கவுரவம் சாதாரணமானதல்ல. தேசமே கொண்டாட வேண்டியது.
எனவே தமிழ் சினிமா பத்திரிகையாளர்கள் சார்பில் இளையராஜாவுக்கு மரியாதை செய்ய முடிவு செய்யப்பட்டது. இன்று காலை பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவைச் சந்தித்த பத்திரிகையாளர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறினர்.
'பொதுவா நாங்கதான் உங்களை அழைத்து செய்தி தருவோம். ஆனா நீங்க என்னைத் தேடி வந்து வாழ்த்து சொல்றீங்க. இந்த அன்புக்கு இணை ஏது.. யாருக்கும் தராத கவுரவத்தை எனக்குத் தந்ததற்கு நன்றி. இதுதான் மிகச் சிறந்த விருது எனக்கு,' என்றார் இளையராஜா பதிலுக்கு.
பின்னர் அவருக்கு பூங்கொத்துகள் தந்து, பொன்னாடை அணிவித்தனர் பத்திரிகையாளர்கள். அவற்றை மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார் ராஜா.
இளையராஜாவின் சாதனையை கவுரவிக்கும் வகையில் அவருக்கு அனைவர் சார்பாகவும் ஆளுயர மாலை அணிவிக்கப்பட்டது.
Post a Comment