தனது ஒவ்வொரு படத்தில் நடிப்பவர்களையும் புது கெட்டப் போட்டு அந்த கெட்டப்பிலேயே கொஞ்ச நாள் சுற்றவைத்து வேஷப் பொருத்தம் பார்ப்பது இயக்குநர் பாலாவின் வழக்கம்.
பிதாமகனில் விக்ரமுக்கு மகா அழுக்கான வெட்டியான் வேடம் போட்டு செங்கல்பட்டு பக்கம் சுற்றவிட்டார்.
நான் கடவுளுக்காக முதலில் ஹீரோயினாக தேர்வான கார்த்திகா என்ற நடிகைக்கு பிச்சைக்காரி வேஷம் போட்டவர், அவரை அப்படி தேனிப் பக்கம் பிச்சையெடுக்க வைத்தார். ஒரு நாள் பூரா பிச்சையெடுத்து 160 ரூபாய் சம்பாதித்தாராம் அவர். அவருக்குப் பின் அந்த வேடத்தில் நடிக்க வந்த பூஜாவுக்கும் அதே பிச்சைக்காரி ட்ரெயினிங்.
பரதேசி படத்துக்காக அதர்வா மண்டையை பாதியாக மழித்து கோணிப்பை உடுத்தி ட்ரையல் பார்த்தார்.
இப்போது அவரது சிஷ்யன் சசிகுமார். பாலா இப்போது இயக்கும் தாரை தப்பட்டை படத்தில் ஹீரோவாக நடிக்கும் சசிகுமாருக்கு இப்போது வேஷப் பொருத்தம் பார்க்க ஆரம்பித்துள்ளார்.
தாடி மீசையை மழித்துவிட்டு, பென்சிலில் சின்ன மீசை வரைந்து, சுருட்டை முடியோடு பர்மா பஜாரில் கடை கடையாக சசிகுமாரை ஏறி இறங்க வைத்திருக்கிறார் பாலா.
அதற்குப் பிறகு நடந்ததுதான் ஹைலைட்!
அதே கெட்டப்போடு கிரீன்பார்க் ஓட்டலுக்குப் போயிருக்கிறார் சசிகுமார். அந்த ஓட்டலில் கதை விவாதத்திலிருந்த தன் நண்பர் சமுத்திரக் கனியைப் பார்க்கலாம் என உள்ளே நுழைந்தபோது, வாசலில் மிரட்டலாக நின்ற செக்யூரிட்டிகள் சசிகுமாரை விடவே இல்லை. நான் சாப்பிடணும் உள்ள விடுய்யா-ன்னு சொன்ன சசியிடம், நீ சாப்பிடற சாப்பாடு இங்க இல்ல, கெளம்பு என்றார்களாம். கடைசி வரை அவரை ஓட்டலுக்குள் விடவே இல்லையாம்.
பின்னர் கார் நிறுத்துமிடத்துக்கு வந்தவர் சமுத்திரக்கனிக்கு போன் செய்தாராம். அவர் ரூமிலிருந்து வந்து சசிகுமாரை அழைத்துக் கொண்டு போய் செக்யூரிட்டிகளிடம் விஷயத்தைச் சொன்னதும் ஆடிப் போனார்கள்.
"சார்.. சார் தப்பா எடுத்துக்காதீங்க, மன்னிச்சிடுங்க' என கெஞ்ச ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால் சசிகுமாரோ அவர்களுக்கு நன்றி சொன்னதோடு, 'என் வேஷம் சரியா இருந்தது என ஒரு வகையில் நீங்க சர்டிபிகேட்டே கொடுத்திட்டீங்க' என்று கூறிவிட்டு வந்தாராம்.
இன்னும் நாதஸ்வரப் பயிற்சி இருக்கிறது சசிகுமாருக்கு. ஏதாவது கச்சேரி அல்லது கல்யாணத்துக்கு வாசிக்க அனுப்பிடுவாரோ பாலா!
Post a Comment