சென்னை: எனக்குக் கிடைத்த தேசிய விருதினை என் தந்தை நாகராஜனுக்கும், ஞானத்தந்தை பாலு மகேந்திராவுக்கும் சமர்ப்பிக்கிறேன் என்று கவிஞர் நா முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் வரிகளுக்காக கவிஞர் நா முத்துக்குமாருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நா முத்துக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
அன்புள்ள பத்திரிக்கை, தொலைக்காட்சி, வானொலி, இணையதள நண்பர்களுக்கு வணக்கம். உங்களில் ஒருவனாக என் வளர்ச்சியை நீங்கள் உணர்கிறீர்கள் என்பதை நானறிவேன். உங்கள் அன்பும், ஆதரவும் என் பயணத்தில் கிடைத்த பூங்கொத்துக்கள்.
"தங்கமீன்கள்" திரைப்படத்தில் நான் எழுதிய "ஆனந்த யாழை"பாடலுக்காக சென்ற ஆண்டின் சிறந்த திரைப்பட பாடலாசிரியருக்கான தேசிய விருது எனக்கு கிடைத்துள்ளது என்பதை உங்களுடன் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இன்னும் தரமான பாடல்களை தமிழ் மக்களுக்கு தர வேண்டும் என்னும் கூடுதல் பொறுப்புணர்வை இவ்விருது என் தோள்களின் மீது ஏற்றி வைத்திருக்கிறது.
தாய், மகன் பாசம் பற்றி நிறைய பாடல்கள் நம்மிடம் உண்டு. தந்தை, மகள் பாசம் குறித்த பாடல்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இந்த பாடலுக்கு தேசிய விருது கிடைத்திருப்பது குறித்து நான் அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.
இத்தருணத்தில் தங்கமீன்கள் இயக்குனர் ராம், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, பாடகர் ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோருக்கு என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்விருதை என் தந்தை நாகராஜனுக்கும், ஞானத்தந்தை பாலுமகேந்திராவுக்கும், இயக்குனர் ராமின் மகள் ஸ்ரீ சங்கர கோமதிக்கும், என் மகன் ஆதவன் நாகராஜனுக்கும், இந்த பாடலுக்காக என் கைகளைப் பிடித்து ஆனந்த கண்ணீர் விட்ட பெற்றோர்களுக்கும் சமர்பிக்கிறேன்.
மீண்டும் உங்கள் ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி.
-இவ்வாறு நா முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
Post a Comment