சென்னை: ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தி தரக்கூடிய செய்தி இது. ஆம்.. கோச்சடையான் வெளியாவதில் மீண்டும் சிக்கல்.
மே 9-ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்ட கோச்சடையான் படத்தின் விளம்பரங்கள் நேற்று முதல் நிறுத்தப்பட்டுவிட்டன.
காரணம்...? ரஜினியோ, சவுந்தர்யாவோ, ரவிக்குமாரோ அல்ல... படத்தின் தயாரிப்பாளர் முரளி மனோகர்தான்!
இவர் ஏற்கெனவே எடுத்த, வெளியிட்ட சில படங்களின் மூலம் ஏற்பட்ட நஷ்டம் ரூ 35 கோடிகளை எடுத்து வைத்தால்தான் கோச்சடையானை வெளியிட முடியும் என தமிழ் திரைப்பட கூட்டமைப்பினர் அறிவித்துவிட்டார்கள்.
சில தினங்களுக்கு முன் நடந்த பேச்சுவார்த்தையில், ரூ 35 கோடியில் பாதியை இந்த வாரம் கொடுத்துவிடுங்கள் என்று கூறியுள்ளனர் கூட்டமைப்பினர். ஆனால் முரளி மனோகர் இன்னும் பணம் தராததால், கோச்சடையான் விளம்பரங்களை நிறுத்தச் சொல்லிவிட்டார்கள். இது ரஜினி படம் என்பதால் வெளிப்படையாக ரெட் போடாமல் பேசிக் கொண்டிருப்பதாக கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்தார்.
நாளைக்குள் இந்தப் பிரச்சினை தீர்ந்தால் மட்டுமே கோச்சடையான் வரும் மே 9-ல் வெளியாகும். காரணம், திரையரங்குகளை ஒப்பந்தம் செய்ய கால அவகாசம் வேண்டுமல்லவா...
பிரச்சினை தீருமா? என நகம் கடித்தபடி கவலையுடன் காத்திருக்கிறது கோச்சடையான் டீம்!
Post a Comment