சென்னை: வடிவேலு நடிக்கும் தெனாலிராமன் படத்தை தடை செய்ய வேண்டும் என்று தலைமை செயலாளரிடம் தெலுங்கு சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு இடைவெளிக்குப் பிறகு தெனாலிராமன் என்ற புதிய படத்தில் வடிவேலு நடித்துள்ளார். இது கற்பனையும் வரலாறும் கலந்த கதையாகும். அதாவது தெனாலிராமன் பாத்திரத்தை மட்டும் எடுத்துக் கொண்டு கற்பனையான மன்னர் பாத்திரத்தைப் படைத்துள்ளனர்.
இதனை வடிவேலுவும், இயக்குநர் யுவராஜும் பல முறை விளக்கமாகச் சொல்லிவிட்டனர். கிருஷ்ணதேவராயர் என்ற பெயரே படத்தில் இடம்பெறவில்லை என்றும் கூறிவிட்டனர்.
ஆனால் தெலுங்கு அமைப்புகள் சில இந்தப் படம் கிருஷ்ணதேவராயரை அவமானப்படுத்துவதாக உள்ளதாகக் கூறி சர்ச்சை கிளப்பி வருகின்றன.
சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் அலுவலகத்தில், தெலுங்கு சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தி சங்க தலைவர் ஜெகதீஷ்வர ரெட்டி கொடுத்த மனுவில், "தற்போது வடிவேலு நடிக்கும் தெனாலிராமன் என்ற திரைப்படம் மூலம் எங்களது உணர்வுகள் பாதிக்கப்படுகின்றன. 16-ம் நூற்றாண்டில் விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் என்ற ராஜாவின் வேடத்தில் வடிவேலு நடிக்கிறார்.
தெனாலிராமன்
சிறந்த அரசாட்சியையும், நிர்வாகத்தையும் வழங்கி, திராவிட மொழிகளை ஆதரித்த அரசனை நகைச்சுவை வேடத்தில் பயன்படுத்துவது, அவரை அவமதிப்பதாகும்.
கிருஷ்ண தேவராயருக்கு 38 மனைவிகளும், 58 குழந்தைகளும் இருப்பதாக படத்தில் காட்டுகின்றனர். ஆனால் அவருக்கு உண்மையில் அவ்வளவு மனைவி, குழந்தைகள் இருந்ததில்லை.ஆனால் கிருஷ்ண தேவராயர் பற்றிய படம் அதுவல்ல என்று தயாரிப்பாளர்களின் தரப்பு மறுக்கிறது. வரலாற்று சம்பவங்களை ஒப்பிட்டு பார்த்தால், அந்த படம் அவரைத்தான் சுட்டிக்காட்டுகிறது என்பது புரியும்.
எனவே எங்கள் சந்தேகம் தீர்க்கப்படும் வகையில், தெனாலிராமன் திரைப்படத்தை திரையிடுவதற்கு முன்பு, வரலாற்று ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், தெலுங்கு அமைப்பினரை கொண்ட குழு, அந்த படத்தை பார்ப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அதன் பின்னர், ஆட்சேபனைக்குரிய காட்சிகளை அகற்றுவதற்கு உத்தரவிட வேண்டும். அந்த இரண்டு பேரின் வேடமும் திரைப்படம் முழுவதும் தொடருமானால், முழு படத்தையும் திரையிட தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால், எங்கள் சுயமரியாதை கேள்விக்குரியதாகிவிடும்,'' என்று கூறப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 18-ம் தேதி இந்தப் படம் வெளியாகவிருக்கிறது. அதற்கு முன் எதிர்ப்பாளர்களுக்கு படத்தைப் போட்டுக் காட்டவும் தயாராக உள்ளதாக வடிவேலு தரப்பு கூறியுள்ளது.
Post a Comment