சென்னை: மண்டல தணிக்கைத் துறை விளக்கக் கடிதத்திலிருந்து தப்பித்திருக்கிறது ரஜினியின் கோச்சடையான். காரணம் சில பத்திரிகை மற்றும் இணைய தளங்களில் வெளியான செய்திகள்தான்!
கோச்சடையான் தமிழ்ப் படத்துக்கு சென்னையில் உள்ள மண்டல தணிக்கைக் குழு எந்த கட்டுமில்லாமல் யு சான்றிதழ் கொடுத்துவிட்டது.
இது மீடியாவில் பெரிய செய்தியாக வெளியாகிக் கொண்டிருந்த நேரத்தில், சிலர் ஒரு கேள்வியை எழுப்பினர்.
கோச்சடையான் இறுதிப் பணிகளை முடிக்க படத்தின் இயக்குநர் சவுந்தர்யா அஸ்வின் சீனாவில் தங்கியிருந்த நேரத்தில், கோச்சடையானுக்கு யு சான்றிதழ் தந்திருக்கிறார்கள்.. இறுதிப் பணிகள் முடியாத ஒரு படத்துக்கு யு சான்றா என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த செய்திகளைப் பார்த்த தணிக்கைத் துறையினர் கோச்சடையான் படக்குழுவுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பத் தயாராகினர்.
அதற்கு முன் கோச்சடையான் குழுவிடம் போனில் விளக்கம் கேட்டுள்ளனர். அப்போதுதான் சில உண்மைகள் அவர்களுக்கே தெரிய வந்துள்ளது. கோச்சடையான் தரப்பில் தவறு இல்லை என்றும், விஷயம் தெரியாமல் சிலர் தவறாக செய்தி வெளியிட்டிருந்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதுகுறித்து மண்டல தணிக்கைத் துறை அலுவலர் வி பக்கிரிசாமி கூறுகையில், "தணிக்கைச் சான்று பெற்ற விஷயத்தில் கோச்சடையான் தரப்பில் எந்தத் தவறும் இல்லை. காரணம் இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்புக்கு, அதுவும் 2டி பதிப்புக்குத்தான் அவர்கள் சான்று பெற்றுள்ளனர்.
3டி மற்றும் இந்திப் பதிப்பின் வேலைகள்தான் இப்போது நடந்து வருவதாகக் கூறினர். இந்த பதிப்புகளுக்கு தனித்தனியாக தணிக்கைச் சான்று பெறவிருக்கின்றனர். எனவே இதில் எந்தத் தவறுமில்லை. பத்திரிகைச் செய்திகளை நம்பி நாங்கள் விளக்கம் கேட்கவிருந்தோம். நல்ல வேளை, கேட்கவில்லை!" என்றார்.
Post a Comment