தமிழ்நாட்டுக்கு தண்ணி வேணும்... புதிய பிரதமரிடம் நதிநீர் இணைப்பு பற்றி பேசுவேன்!!- இது சிவகுமார்

|

சென்னை: தண்ணீரின்றி தவிக்கும் தமிழகத்துக்கு நீர் வேண்டும். கங்கையில் வீணாய் போகும் நீரை தமிழகத்துக்கு தர வேண்டும். இதுகுறித்து புதிய பிரதமரிடம் நான் வலியுறுத்துவேன் என ஆவேசமாகத் தெரிவித்தார் நடிகர் சிவகுமார்.

நடிகர் சிவகுமார் தன் மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தியுடன் இன்று இந்திப் பிரச்சார சபா சாவடியில் வாக்களித்தார்.

காலில் காயமடைந்திருந்த சூர்யா, ஊன்று கோல் உதவியுடன் வாக்களிக்க வந்தார்.

தமிழ்நாட்டுக்கு தண்ணி வேணும்... புதிய பிரதமரிடம் நதிநீர் இணைப்பு பற்றி பேசுவேன்!!- சிவகுமார்

வாக்களித்து முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், "இந்த முறை அமையும் அரசு மூலம் தமிழகத்துக்கு நல்லது நடக்க வேண்டும். மக்களின் அத்தியாவசியத் தேவைகள் தண்ணீரும் மின்சாரமும்தான்.

தமிழகம் இந்த இரண்டுமின்றித் தவிக்கிறது. ஆனால் வடக்கில் கங்கை நதியில் 60 சதவீத தண்ணீர் வீணாகக் கடலில்தான் கலக்கிறது. இந்த நீரை தமிழகத்துக்கு திருப்ப வேண்டும். அதற்கு நதிநீர் இணைப்புதான் ஒரே வழி. இதுபற்றி நிச்சயம் புதிய பிரதமரிடம் பேசுவேன்.

மேலும் காற்றாலை, சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரித்து தமிழத்தின் மின் தேவையைப் பூர்த்தி செய்யுமாறும் வலியுறுத்துவேன்.

சொந்த மக்கள் தண்ணீரின்றி தவிக்கும் நிலையில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா என்ற ஆராய்ச்சியெல்லாம் தேவையா.., " என்றார்.

 

Post a Comment