மதுரை: இளையராஜாவின் சங்கீதத் திருநாள் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து அனைவரும் கேட்டு வந்த கேள்வி, டிக்கெட் கிடைக்குமா? என்பதுதான்.
கடைசியில் இந்த கேள்வியை இளையராஜாவே கேட்கும் அளவுக்கு டிக்கெட்டுகளுக்கு ஏக டிமாண்டாகி, விற்றுத் தீர்ந்துவிட்டன என்பதுதான் உண்மை.
இளையராஜா கச்சேரி.. அதுவும் நம்ம மண்ணில் முதல் முறையாக நடக்குது என்ற பெருமையும் மகிழ்ச்சியும் ஒவ்வொரு மதுரைவாசிகளிடமும் பார்க்க முடிந்தது.
காலையிலிருந்தே களைகட்டியிருந்தது மதுரை தமுக்கம் மைதானம். ஆன்லைன் புக்கிங் முழுவதும் முடிந்துவிட்டதால், டிக்கெட்டுகள் விற்பனைக்கு வைக்கப்பட்ட மையங்களில் ஏக டிமான்ட்.
டிக்கெட் கிடைக்காதவர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை ஏதோ ஒருவிதத்தில் பிடித்து நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.
மேற்கொண்டு டிக்கெட்டுகள் கிடைப்பது கஷ்டம் என்ற சூழல். அப்போது தன் உதவியாளர்களில் ஒருவரான கண்ணனுக்கு ஒரு போன். வந்தது இசைஞானி இளையராஜாவிடமிருந்துதான்...
"என்னய்யா டிக்கெட் தீர்ந்துடுச்சாமே... ரெண்டு டிக்கெட் கிடைக்குமா பாரு. என்னோட நண்பர்கள் ரெண்டு பேர் கேட்கிறார்கள்," என்றாராம்.
பாருங்க.. கச்சேரியை நடத்துற நம்ம சாருக்கே டிக்கெட் கிடைக்கவில்லை எனும் அளவுக்கு போயிடுச்சி நிலைமை.. என்றார் அவர்.
Post a Comment