சென்னை: விரைவில் மணநாள் காண இருக்கின்ற பாடகி சின்மயி தனது திருமணத்திற்கு யாரும் அன்பளிப்பு வாங்கி வர வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.
பிரபல சினிமாப் பாடகி சின்மயி. இவருக்கும், நடிகர் ராகுல் ரவீந்தருக்கும் வரும் மே 6ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. மிகவும் எளிமையாக ஹோட்டல் ஒன்றில் திருமணத்தை நடத்த திட்டமிடப் பட்டுள்ளது. தனது திருமண நாளில் வீண் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்த சின்மயி, மற்றவர்களுக்கும் உபயோகப் படும் மாதிரியாக எதையாவது செய்ய திட்டமிட்டார்.
அதன்படி, தனது திருமணத்திற்கு அழைப்பு விடுக்கும் போதே தயவு செய்து பரிசுப் பொருள் வாங்கி வர வேண்டாம் என தெரிவித்து விட்டாராம்.
ஆனால், பரிசுப் பொருள் வேண்டாம் என மறுத்த அதே சமயத்தில் மொய் எழுதக் கூடாது எனக் கூறவில்லை. காரணம் தனது திருமணத்திற்கு தர நினைக்கும் பணத்தை லடாக்கில் உள்ள 17 ஆயிரம் அடி பவுண்டேஷனுக்கு நிதியாக அளிக்க வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.
இது தொடர்பாக சின்மயியின் தாயார் கூறும் போது, ‘இன்றைய விலைவாசியில் சாதாரண பூங்கொத்து என்பதன் விலையே ரூ 500ஐத் தொடுகிறது. மறுநாளே அந்தப் பூங்கொத்துக்கள் வாடி விடுகின்றன. இதனால் யாருக்கு என்ன பயன்?
அதனால் தான் சின்மயியின் திருமணத்தை உபயோகமாக இருக்குமாறு செய்ய வேண்டும் என யோசித்து இவ்வாறு திட்டமிட்டோம். இத்தகவலை திருமண அழைப்பிதழிலும் தெரிவித்துள்ளோம். நேரில் பார்ப்பவர்களிடமும் மறக்காமல் கூறி வருகிறோம்' என்றார்.
Post a Comment