தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளுக்கு தமிழ்நாட்டிலும் வாக்கில்லை.. வாக்களிக்க சொந்த ஊருக்கும் போகவில்லை

|

சென்னை: தமிழ் சினிமாவில் உச்சத்திலிருக்கும் பெரும்பாலான நடிகைகளுக்கு சென்னையிலோ அல்லது தமிழகத்தின் பிற பகுதியிலோ வாக்குரிமையே இல்லை.

பொதுவாக தமிழ் சினிமாவில் முன்னணியிலிருக்கும் நடிகைகள் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை.

வட மாநிலங்கள், ஆந்திரா அல்லது கேரளாவைச் சேர்ந்தவர்கள்தான் தமிழின் பெரும்பாலான நடிகைகள்.

டாப் நடிகைகளுக்கு தமிழ்நாட்டிலும் வாக்கில்லை.. வாக்களிக்க சொந்த ஊருக்கும் போகவில்லை!

இவர்களுக்கு சொந்த ஊரில் வாக்குரிமை இருக்குமா என்பதும் சந்தேகம்தான். காரணம் 16 வயதிலேயே பெரும்பாலானோர் நடிக்க வந்துவிடுகிறார்கள். நடிக்க வந்த பிறகு சென்னையில் இருந்தாலும், வாக்களிப்பது குறித்த ஆர்வம் இவர்களில் பெரும்பாலானோர்க்கு இல்லை.

வாக்களிக்கச் சென்றால் ரசிகர்கள் மொய்த்துக் கொள்வார்கள், பாதுகாப்புப் பிரச்சினை என்றெல்லாம் இருப்பதால் பொதுவாகவே நடிகைகள் வாக்களிக்க வருவதில்லை. ரிடையர் ஆன பிறகு, வாக்குக் கேட்க அல்லது தேர்தலில் நிற்க மட்டும் தயாராக வந்துவிடுவார்கள்!

இந்த தேர்தலிலும் இதே நிலைதான்.

முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னா, நயன்தாரா, காஜல் அகர்வால், தமிழ்நாட்டு மருமகளாகப் போகும் அமலா பால், ப்ரியா ஆனந்த், ஸ்ரீதிவ்யா... இவர்களில் யாருக்குமே வாக்குரிமை இல்லை. இவர்களுக்கு ஒருவேளை அவரவர் மாநிலங்களில் வாக்குரிமை இருந்தாலும் அதைச் செலுத்த மெனக்கெட்டுப் போகவில்லை.

தமிழ் சினிமாவின் நிஜமான டாப் நடிகை லட்சுமி மேனனுக்கோ இன்னும் வாக்களிக்கும் வயசே வரவில்லையாம்!

நடிகை த்ரிஷாவுக்கு சென்னையில் வாக்குரிமை உள்ளது. ஆனால் அவர் ஊரில் இல்லாததால் வாக்களிக்கவில்லையாம்!

 

Post a Comment