தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் என்ற தலைப்பில் ஒரு படம் தயாராகிறது.
வி.எல்.எஸ். ராக் சினிமா சார்பாக வி.சந்திரன் தயாரிக்கும் இந்தப் படத்தை ராம் பிரகாஷ் ராயப்பா இயக்குகிறார். எங்கேயும் எப்போதும் பட இயக்குனர் சரவணனிடம் இணை இயக்குனராய் பணிபுரிந்து, பல விளம்பர படங்களை இயக்கியவர் ராம் பிரகாஷ் ராயப்பா.
இப்படத்திற்கு தமன் இசையமைக்க, தீபக் குமார் பதி ஒளிப்பதிவு செய்கிறார்.
இப் படம் குறித்து இயக்குனர் பிரகாஷ் நம்மிடம் கூறியதாவது:
"பூமியை நோக்கி வரும் காந்த புயலால் தகவல் தொழில்நுட்பம் முழுவதுமாக பாதிக்கப்படுகிறது. இதில் உள்ள முக்கிய கதாபாத்திரங்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த பாதிப்பில் இருந்து அனைவரும் எவ்வாறு மீண்டு வந்தனர் என்பதுதான் படத்தின் கதை. இன்று நாம் முழுக்க முழுக்க தகவல் தொடர்பை மட்டும்தான் நம்பியுள்ளனர். அது எப்படி நம்மை பாதிக்கிறது என்பதைச் சொல்லியிருக்கிறேன்.
கதாநாயகனாக அட்டக்கத்தி தினேஷ், நகுல் ஆகியோர் ஹீரோக்களாக நடிக்கின்றனர். இவர்களுக்கு ஜோடியாக பிந்து மாதவி, ஐஸ்வர்யா நடிக்கிறார்கள். ஐஸ்வர்யா கொல்கத்தாவைச் சேர்ந்த புதுமுகம். எதிர்நீச்சலில் சிவகார்த்தியேன் நண்பனாக வரும் சதீஷ் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். காதல், த்ரில்லர், சஸ்பென்ஸ், ஆக்சன் என ஒரு கமர்சியல் படத்திற்கு தேவையான அனைத்து கலவைகளும் படத்தில் உள்ளது.
ஆனாலும் மற்ற கமர்சியல் படங்களை போல் அல்லாது இப்படம் சிறிது வித்தியாசப்படும்.
இந்தப் படத்தில் எனக்கு சவாலாக இருந்ததே, இரண்டு நாயகர்களைச் சேர்த்து படம் பண்ணுவதுதான். இந்த மாதிரி படம் பண்ணும்போது இவர் இருந்தால் அவர் இல்லை, அவர் இருந்தால் இவர் இல்லை என்று சிக்கலாகப் போய்விடும்.
பல ஹீரோக்களிடம் பேசி, கடைசியில் நகுலும் தினேஷூம் செட் ஆனார்கள். தினேஷ் இந்தப் படத்தில் ரொம்பவே கஷ்டப்பட்டார். காரணம், இந்த ஷூட்டிங்கின்போதுதான் அவர் காலில் அடிபட்டு பத்து நாட்கள் ரெஸ்ட் எடுக்க வேண்டி வந்தது", என்றார்.
Post a Comment