நடிகர் சதிஷ் கவுசிக் வீட்டில் ரூ 1.2 கோடியைத் திருடிய வேலைக்காரர் கைது

|

நடிகர் சதிஷ் கவுசிக் வீட்டில் ரூ 1.2 கோடியைத் திருடிய வேலைக்காரர் கைது

மும்பை: இந்திப்பட நடிகர் சதிஷ் கவுசிக் வீட்டில் ரூ.1 கோடியே 20 லட்சம் திருடிய வேலைக்கார வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்..

மும்பையை சேர்ந்தவர் சதிஷ் கவுசிக். இந்தி திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான இவர் வெர்சோவாவில் உள்ள ராஜ் கிளாசிக் அப்பார்ட்மெண்ட் கட்டிடத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் வேலை செய்து வருபவர் சஜன்குமார்(வயது22).

சம்பவத்தன்று, சமீபத்தில் வெளியான ஒரு படத்தின் வசூல் தொகையான ரூ.1 கோடியே 20 லட்சம் பணத்தை ஒரு பையில் போட்டு, சதிஷ் கவுசிக் தனது படுக்கை அறையில் வைத்துள்ளார். அவசர வேலை காரணமாக பணத்தை பீரோ அல்லது லாக்கரில் வைக்காமல், நமது வீடு தானே என்ற எண்ணத்தில் அப்படியே வைத்து விட்டு வெளியில் சென்றுள்ளார் சதிஷ்.

சிறிது நேரம் கழித்து பணத்தை பத்திரமாக எடுத்து வைக்கலாம் என சதிஷ் கவுசிக்கின் மனைவி அறைக்குள் சென்று தேடி இருக்கிறார். ஆனால், பணம் இருந்த பையை அங்கு காணவில்லை. இதற்கிடையே வீட்டு வேலைக்காரர் சஜன்குமார்(22) திடீரென மாயமானாதும் தெரிய வந்துள்ளது.

இதனால் சந்தேகம் அடைந்த சதிஷ் கவுசிக்கின் மனைவி வெர்சோவா போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக புகார் அளித்தார். அதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், சஜன்குமார், செம்பூர் வாஷிநாக்கா பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவர் வீட்டில் தலைமறைவாக இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.

அதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்து சென்ற போலீசார் சஜன்குமாரைக் கைது செய்து அவர் திருடிச் சென்ற பணத்தை மீட்டனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சஜன்குமார், வரும் 26-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட உள்ளார்.

 

Post a Comment