சென்னை: தனது பெயரில் போலியாக ஃபேஸ்புக் கணக்கு தொடங்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திரைப்பட இயக்குநர் ஹரி கோவை மாநகர காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் ஹரி. தற்போது விஷால், ஸ்ருதிஹாசன் நடிக்கும் "பூஜை' படத்தை இயக்கி வருகிறார். கோவையில் இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது.
இயக்குநர் ஹரி, கோவை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனை வியாழக்கிழமை சந்தித்து புகார் ஒன்றை அளித்தார்.
அதில், "நான் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் இயக்குநராகப் பணியாற்றி வருகிறேன். இதுவரை எனது பெயரில் நான் ஃபேஸ்புக் கணக்கு எதுவும் தொடங்கவில்லை.
திரைப்படத் துறையில் நான் பிரபலமாக உள்ள காரணத்தினால், இயக்குநர் ஹரி என்ற எனது பெயரில் ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி அதில் எனது விவரங்களை தவறாக வெளியிட்டுள்ளனர். அதை சிலர் தவறாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆகவே எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட ஃபேஸ்புக் கணக்கை தடை செய்து, இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Post a Comment