தமிழில் வருகிறது, ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆதாமிண்டே மகன் அபூ!

|

பள்ளி வாசல் திண்னையில் அத்தர், மிஸ்வாக் குச்சி, தஸ்பீஹ் மணிகள், மார்க்க நூல்கள் விற்கும் 75 வயதான முதியவருக்குள் ஒரு கனவு

தன் 65 வயதான மனைவியை அழைத்துக் கொண்டு எப்படியாவது ஹஜ் பயணம் சென்றுவிட வேண்டும் என்பதுதான் அந்தக் கனவு.. ஆசை.

தமிழில் வருகிறது, ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆதாமிண்டே மகன் அபூ!

'இறைவா நான் உன் அடிமை' என இருவரும் பலமுறை உரக்க கூவ வேண்டும். புனித அப்துல்லாஹ்வை போற்றி வழிபட வேண்டும் என்று நெஞ்சிலும், வழிகளிலும் நீண்டும் நிறைந்த ஆசை.

கனவு காணும் அந்த எளிய வியாபாரிக்கு வெளிநாட்டில் நல்ல ஊதியம் பெறும் ஒரு மகன். அவனுக்கோ பெற்றோர்களைப் பற்றிய ஒரு சிந்தனையும் இல்லை.

இந்த முதிய தம்பதிகள் தங்களுக்கு சொந்தமான சிறிய தோட்டத்தின் பலா மரத்தையும், பசுமாட்டையும் அதன் கன்றையும், வீட்டிலிருக்கும் மூன்று பவுன் தோடுகளையும் விற்று ஹஜ் பயண கட்டணத்தை செலுத்துகிறார்கள். ஆனால் ஹஜ் பயணம் அவ்வளவு எளிதில் அமைந்து விடுமா...

எத்தனையோ போராட்டங்கள், பிரச்சனைகள்... இந்த முஸ்லிம் தம்பதிகள் பாஸ்போர்ட் பெற உறுதுணையாக இருக்கிறார் இந்து சமுதாயத்தை சேர்ந்த ஒரு பள்ளிக்கூட மாஸ்டர்.

அவரின் உடைமையான பலா மரத்தை பெறுகிறார் ஜான்சன் என்ற கிறிஸ்துவ மர வியாபாரி.

பற்றாக்குறை பணத்திற்கு நானே பொறுப்பேற்கிறேன் என்கிறார் ஹ்ஜ் டிராவல்ஸ் மேலாளர்.

இவ்வளவு நடந்தும் ஹஜ் பயணம் நடை பெறாமலேயே போகிறது அந்த தம்பதிகளுக்கு.... இவ்வளவும் நடந்த நிலையில் ஊரில் உள்ள பள்ளி வாசலில் ஹஜ் பெருநாளை வரவேற்கும் தக்பீர் முழங்குகிறது.

தக்பீர் முழக்கம் முதியவர் அபூவின் இதயத்தில் சில உண்மைகளை உரக்கச் சொல்கிறது. இந்த உண்மைகள் எல்லாம் இன்னொரு "குரான்" ஆகவே இருக்கிறது. இப்படி முடிகிறது படம்.

இதைக் காட்சிகளாகப் பார்க்கும் பொழுது திரைப்பட அரங்கமே விசும்பி விசும்பி அழ ஆரம்பித்து விடுகிறது. படத்துக்குப் பெயர் ஆதாமிண்டே மகன் அபூ.

ஆஸ்கர் விருதுக்கு

கடந்த ஆண்டு ஆஸ்கார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஒரே மலையாள திரைப்படம் இது. சிறந்த திரைப்படத்துக்கான கேரள அரசு விருதையும், இந்திய அரசின் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் ஏற்கனவே பெற்றுவிட்டது ஆதாமிண்டே மகன் அபூ.

சலீம் அகமது

இயக்குநர் சலீம் அகமதுக்கு இது ஒரு புதிய அனுபவக்களம். இந்தப் படத்தை உருவாக்க பத்தாண்டுதவம் இருந்திருக்கிறார். இவர் ஒரு மேடை நாடகக் கலைஞராக வாழ்க்கையை தொடங்கியவர். 'டிராவல்ஸ் கம்பெனியில் பணிபுரிந்த அனுபவமே இந்தக் கதைக் களத்தை உருவாக்கித் தந்தது' என்கிறார் சலீம் அகமது.

சலீம் குமார்

கதை நாயகனாக வரும் சலீம் குமார் அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்துவிட்டார். இவருக்கு ஜோடியாக ஜரினா வஹாப், ஒரு நிஜமான மலபார் முஸ்லீம் குடும்பத்தை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். படத்தின் ஒவ்வொரு காட்சியும் கவிதை என்றால் மிகையல்ல.. அதற்கு மது அம்பட்டின் சிறப்பான ஒளிப்பதிவும், நேர்த்தியான பின்னணி இசையும் பெரும் துணையாய் நின்றுள்ளன.

அழுத்தமான திரைக்கதை

அபூவாக நடித்த சலீம் குமார், "அச்சனுறங்காத வீடு" "கிராமபோன்", "பெரு மழக்காலம்" போன்ற படங்களில் காட்டிய நடிப்பை எல்லாம், இதில் அபூ வாக வாழ்ந்து மிஞ்சிவிட்டார், ஜரினா வஹாப், கலாபவன்மணி, சூரஜ் வென்ஜராமுடு, முகேஷ், நெடுமுடி வேணு, சசி கலிங்கா, கோபகுமார் போன்ற நட்சத்திரங்களும் படத்துக்கு வலு சேர்த்துள்ளனர்.

மண்ணையும், மண் சார்ந்த உயிரினங்களையும் நேசிக்க மனிதன் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் வலிமையான இந்திய ஒருமைப்பாட்டையும் அனைவர் மனதிலும் அழுந்தச் சொல்லும் விதத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

30 விருதுகள்

"அதாமிண்ட மகன் அபூ" திரைப்படத்தை எழுதி இயக்கி இணைத் தயாரிப்பாளராகவும் பங்கெடுத்துள்ளார் இயக்குனர் சலீம் அஹமது. சிறந்த படம். நடிகர், ஒளிப்பதிவு, பின்னணி, இசைக்கு என 4 தேசிய விருதுகளையும், 4 கேரள அரசு விருதுகளையும் பெற்ற இப்படம் பல்வேறு அமைப்புகள் விமர்சகர்களின் விருதுகள் என சுமார் 30 விருதுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

இவ்வளவு பெருமைகள், சிறப்புகள் பெற்ற "ஆதாமிண்ட மகன் அபூ" படத்தை "ஆதாமின் மகன் அபூ" என்ற பெயரில் தமிழில் ஹனிபா மூவீஸ் விரைவில் தமிழ்நாடு முழுவதும் திரையிட உள்ளனர்.

 

Post a Comment