மும்பை: பிரதமராகப் போகும் மோடிக்கு எதிராக தான் டுவிட்டரில் கருத்து எதுவும் பதியவில்லை என விளக்கமளித்துள்ளார் நடிகர் ஷாரூக்கான்.
நடந்து முடிந்த 16வது லோக்சபா தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடி வரும் 26ம் தேதி பிரதமராக பதவியேற்க இருக்கிறார்.
இந்நிலையில் கடந்த வெள்ளியன்று, அதாவது தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட அன்று, ‘மோடி வெற்றி பெற்றால் தான் இந்தியாவை விட்டே வெளியே சென்று விடுவதாக' இந்தி நடிகர் ஷாரூக்கான் டுவிட்டரில் தெரிவித்திருப்பதாக வெளியான செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், அத்தகவலை மறுத்துள்ளார் ஷாரூக். இது தொடர்பாக ஷாரூக் டுவிட்டரில் வெளியிட்டுள்ள மறுப்புத் தகவலில் கூறியிருப்பதாவது :-
டுபாக்கூர் டுவிட்....
நான் போடாத, டிவீட் பற்றி சில முட்டாள்கள் பேசி வருகிறார்கள். அவர்களுக்குப் பதில் சொல்ல இதுதான் நல்ல நேரம். அது ஒரு போலியான டுபாக்கூர் டிவிட். அதற்கு மேல் சொல்வதற்கு இல்லை.
இது தான் உண்மையான டுவிட்...
உண்மையில், மே 16ம் தேதி ஷாருக்கான் கொடுத்திருந்த ஒரு டிவிட்டில், ‘மக்கள் என்ன மாதிரியான ஒரு உறுதியான தீர்ப்பை அளித்துள்ளனர். இதன் மூலம் மாற்றம் ஒன்றே மாறாதது என்பதை நிரூபித்துள்ளனர். இப்போது மிகவும் வலிமையான, உண்மையான நம்பிக்கையான இந்தியாவுக்காக அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.
குழப்பத்திற்கு காரணம்...
இந்தக் குழப்பம் உருவாக முக்கியக் காரணம் நடிகர் கமல் ஆர்.கான் தான். காரணம் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தன்னை சுருக்கமாக கே.ஆர்.கே எனக் குறிப்பிட்டுள்ளார்.
எனது வாக்குறுதி...
முன்னாள் பிக்பாஸ் பக்கேற்பாளரான கமல் கான் தான் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஷாரூக் மற்றும் சிலர் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்களா எனத் தெரியவில்லை. ஆனால், மோடி பிரதமரானால் நான் முன்பே கூறியபடி இந்தியாவை விட்டே சென்று விடுவேன்'எனக் கூறியிருந்தார்.
எழுத்துப் பிழை...
ஷாரூக்கானை சுருக்கமாக எஸ்.ஆர்.கே எனக் குறிப்பிடுவது வழக்கம். இந்த ஒரு எழுத்துப் பிழையால் தான் இந்தக் குழப்பம் உண்டாகியுள்ளது.
Post a Comment