திண்டுக்கல்: நிலமோசடி செய்ததாக நடிகர் வாகை சந்திரசேகர் அவரது மனைவி உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு பகுதியில் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றி வருபவர் சிவசங்கரன் மனைவி கவுசல்யா. இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் அவர் குறிப்பிட்டிருந்ததாவது:
எனது தந்தை குமரவேலுக்கு சொந்தமான 3 ஏக்கர் 15 சென்ட் நிலம் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா மாலையகவுண்டன்பட்டியில் இருந்தது. இந்த இடத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் 18 சென்ட் நிலத்தை ஆர்ஜிதம் செய்தது போக மீதி இருந்த 2 ஏக்கர் 97 சென்ட் நிலத்தை 31.8.2012-ந் தேதி எனது தந்தை குமரவேல் எனக்கும் எனது சகோதரிகள் வித்யா, ரம்யா ஆகிய 3 பேருக்கும் தான செட்டில்மெண்ட் எழுதி கொடுத்தார். இதற்கு பட்டாவும் உள்ளது.
இதில் 38 சென்ட் நிலத்தை கோவை சரவணம்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி கவுடர் சுப்பம்மாள், மாலைய கவுண்டன்பட்டியை சேர்ந்த ஆண்டிச்சாமி மனைவி பாப்பம்மாள், மகன் சரவணன், ஆகியோர் போலி பத்திரம் தயாரித்து கடந்த 11.3.2010-ந் தேதி நிலக் கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் தங்கள் பேரில் எழுதிக்கொண்டனர்.
இந்த இடத்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பகுதியை சேர்ந்த ராஜம்பாடி மகன் பகீரதன், இவரது மனைவி சங்கீதா மேனன், பரசுஅரசன், பள்ளப்பட்டி சின்னச்சாமி, அம்மையநாயக்கனூர் துரைராஜ், நடிகரும், தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினருமான வாகை சந்திரசேகர், இவரது மனைவி ஜெகதீஸ்வரி ஆகியோர் நிலக்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிந்த கந்தப்பகோடையை சேர்ந்த முருகபாண்டி என்பவரது துணையுடன் நடிகர் சந்திரசேகரின் மனைவியான ஜெகதீஸ்வரியின் தங்கை மகன் பகீரதன் பெயரில் எழுதிக்கொண்டனர்.
இது குறித்த விவரம் எனது தந்தைக்கு தெரியவரவே அதிர்ச்சி அடைந்தார். நியாயம் கேட்க சென்றபோது 1997-ம் ஆண்டு அரசு நிலத்தை கைப்பற்றியவர்களுக்கே அது கிடைக்கவில்லை. நீ இது குறித்து புகார் செய்தால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டினார்.
எனவே இது குறித்து வழக்குப்பதிவு செய்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து விசாரணை நடத்த திண்டுக்கல் நில அபகரிப்பு மீட்பு தனிப்பிரிவினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில் நடிகர் சந்திரசேகர் உள்பட குற்றம் சாட்டப்பட்ட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் சுப்பம்மாள், பாப்பம்மாள், பத்திர எழுத்தர் முருகபாண்டி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்னர்.
Post a Comment