அதிரடி ஆட்குறைப்பு… வாகனக் குறைப்பு… டிவி சேனலில் நடப்பது என்ன?

|

அரசியல்வாதிகள் ஆளுக்கு ஒரு சேனல் வைத்துக்கொண்டு தங்களின் கட்சி செய்திகளை ஒளிபரப்பி வருகின்றனர். பொழுதுபோக்கு சேனல் தொடங்கிய கையோடு 24 மணிநேர செய்தி சேனலும் தொடங்குவதும் வாடிக்கையாகி வருகிறது.

நாடாளுமன்ற தேர்தல் முடிந்த கையோடு பல டிவி சேனல்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் இறங்கிவிட்டனவாம். முக்கிய அரசியல்வாதியின் சேனலில் ஒரே நாளில் 90 பேர் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஆட்குறைப்பும் நியாயமாக நடைபெறவில்லை என்கின்றனர். நீண்ட நாட்களாக பணியில் இருப்பவர்களை மற்றும் திறமையாக பணியாற்றுபவர்களை வேலையில் இருந்து நீக்கியுள்ளளனர். ஹெச் ஆர், செய்தி ஆசிரியர் மற்றும் ரிசப்சனிஸ்ட் ஆகியோர் தங்களுக்கு வேண்டியவர்களை எல்லாம் பணியில் வைத்து விட்டு, வேண்டாத அதே சமயம் திறமையானவர்களை பணியில் இருந்து விரட்டியுள்ளனர் என்கின்றனர் தகவல் அறிந்தவர்கள்.

ஆட்குறைப்பு நடவடிக்கையில் ரிசப்சனிஸ்டிற்கு என்ன வேலை என்று ஆச்சர்யம் அடைய வேண்டாம். ரிசப்சனிஸ்ட்தான் அங்கு அதிகாரம் மிக்கவராம்.

ஒட்டுமொத்தமாக திடீரென நிறைய பேர் விலக்கபட்டுள்ள செய்தி ஒட்டுமொத்த ஊடகத்துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது முழுக்க உறவினரின் தன்னிச்சையான முடிவென்றும், வெளிநாட்டில் உள்ள தலைவருக்கு இதுகுறித்த தகவல் ஏதும் தெரியவில்லையென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் தலைமை செயலகத்தில் சிலர் ஒன்றிணைந்து முதல்வர் தனிப்பிரிவில் ஒட்டுமொத்தமாக புகார் கொடுத்திருக்கிறார்களாம். கூடவே லேபர் டிபார்ட்மென்டிலும் புகார் கொடுப்பார்கள் என தெரிகிறது.

சேனலில் ஆட்குறைப்பை தொடர்ந்து தற்போது வாகன குறைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது. ரிப்போர்ட்டர்கள் பயன்பாட்டில் இருந்த சுமார் 5 இன்டிகா வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. காலை மற்றும் மதிய ஷிப்ட் ரிப்போட்டர்களுக்கு மட்டுமே தனி வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

பொது ஷிப்ட் ரிப்போர்ட்டர்கள் மூன்று பேருக்கும் ஒரே வாகனம். அந்த ஒரு வாகனத்தில் மூன்று பேரும் சென்று தங்களுக்கு உரிய இடத்தில் இறங்கிக்கொள்ள வேண்டும் என்ற பாணி கடைபிடிக்கப்படுகிறது.

ஆட்களை மேலும் குறைப்பதற்கான ஒப்புதலை நிர்வாகம் வழங்கிவிட்டதாகவும், அடுத்த கட்ட ஆட்குறைப்பு இந்த மாத இறுதியில் இருக்கும் என்றும் தகவல்.

 

Post a Comment