நடிகர் சூர்யாவின் மேனேஜர் என்னை மிரட்டுகிறார்: போலீசில் இயக்குனர் புகார்

|

நடிகர் சூர்யாவின் மேனேஜர் என்னை மிரட்டுகிறார்: போலீசில் இயக்குனர் புகார்

சென்னை: நடிகர் சூர்யாவின் மேனேஜர் தன்னை மிரட்டுவதாக சரவணன் என்கிற சூர்யா படத்தின் இயக்குனர் ராஜா சுப்பையா போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

ராஜா சுப்பையா என்பவர் சரவணன் என்கிற சூர்யா என்ற படத்தை இயக்கி தயாரித்துள்ளார். இந்த படத் தலைப்பால் அவர் பிரச்சனையில் சிக்கியுள்ளார். நடிகர் சூர்யாவின் இயற்பெயர் சரவணன். அதனால் இந்த தலைப்புக்கு சூர்யா தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் ராஜா சுப்பையா சென்னை போலீசில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகார் மனுவில் கூறியிருப்பதாவது,

நான் சென்னையில் ஐஏஎஸ் அகாடமி நடத்தி வருகிறேன். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்திலும் பணியாற்றி இருக்கிறேன். சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சரவணன் என்கிற சூர்யா என்ற படத்தை தயாரித்திருக்கிறேன். இந்தப் படத்தின் தலைப்பில் சூர்யா மற்றும் அவரது தந்தை சிவகுமார் தலையீடு இருப்பதால் பதிவு செய்ய மறுத்தனர். சூர்யாவின் மேனேஜர் ராஜசேகர் என்னை தினமும் தொலைபேசியில் மிரட்டி வருகிறார். எனவே தயாரிப்பாளர் சங்கம் மீதும், ராஜசேகர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ராஜசேகர் கூறுகையில்,

நான் யாரையும் மிரட்டவில்லை. அவர் விளம்பரத்திற்காக தேவையில்லாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். படத் தலைப்பு சூர்யாவை குறிக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. இந்த விவகாரம் குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் மீது 8 மாதங்களுக்கு முன்பு புகார் கொடுத்துள்ளோம் என்றார்.

 

Post a Comment