மும்பை: சம்பவத்தை நேரில் கண்ட சாட்சிகள் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் தனது முன்னாள் காதலர் நெஸ் வாடியா மீது நடிகை ப்ரீத்தி ஜிந்தா அளித்த பாலியல் புகார் குறித்த விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்தி நடிகையும் கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் இணை உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா தனது முன்னாள் காதலரும், தற்போதைய தொழில் ரீதியான பார்ட்னருமான நெஸ் வாடியா மீது மும்பை போலீசில் பரபரப்பு பாலியல் புகார் ஒன்றை அளித்தார்.
அதில், தனது முன்னாள் காதலரும், பிரபல தொழில் அதிபருமான நெஸ் வாடியா பொது இடத்தில் தன்னை மிரட்டியதாகவும், பாலியல் தொந்தரவு அளித்ததாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் மே 30ம் தேதி மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் நெஸ் வாடியா ப்ரீத்தியிடம் தகராறு செய்ததை நேரில் பார்த்த 2 பேரை அடையாளம் கண்டு அவர்களிடம் வாக்குமூலம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது.
இதற்கிடையே மைதானத்தில் இருந்த கண்காணிப்புக் காட்சிகளைப் போலீசார் சோதனையிட்டனர். ஆனால், அவற்றில் சண்டை காட்சிகள் தெளிவாக பதிவாகவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், நேரடி சாட்சியங்கள் மட்டுமே வழக்கை விசாரிக்க போலீசாருக்கு உதவிகரமாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியாக ப்ரீத்தி ஜிந்தா குறிப்பிட்ட இரண்டு சாட்சிகளும் தற்போது போலீசாருக்கு தேவையான ஒத்துழைப்பை தர மறுக்கிறார்களாம். இதனால் விசாரணையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
Post a Comment