சென்னை: நடிகைகளுக்கு நான் ஒருபோதும் பாடும் வாய்ப்பைத் தர மாட்டேன் என்று இசையமைப்பாளர் எஸ்எஸ் குமரன் கூறினார்.
தமிழ் பட உலகில் நடிகைகள் பலர் பாடகிகளாகி வருகின்றனர். ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன், லட்சுமி மேனன், சினேகா என பல நடிகைகள் சினிமாவில் பின்னணி பாட ஆரம்பித்துவிட்டனர்.
மேலும் பல நடிகைகளும் பாடுவதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். இது தொழில் முறையில் பின்னணி பாடும் கலைஞர்களுக்கு பெரும் பாதகமாக முடிந்துள்ளது.
இந்த நிலையில் இசையமைப்பாளர் எஸ்எஸ் குமரன் இந்தப் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், "படங்களில் நடிகைகளை பாட வைக்கும் போக்கு அதிகரிக்கிறது. ஆனால் நான் அவர்களைப் பாட வைக்க மாட்டேன். பெரும்பாலான நடிகைகளுக்கு தமிழ் டப்பிங் பேசவே தெரியவில்லை. வேறு டப்பிங் கலைஞர் குரல் கொடுக்கிறார். ஆனால் பாடல் பாட மட்டும் வந்துவிடுகிறார்கள். இவர்களெல்லாம் தமிழ் பாடல்கள் பாடினால் எப்படி இருக்கும். நவீன தொழில் நுட்பத்தில் அவர்களை பாட வைத்து விடலாம். ஆனாலும் அப்பாடலில் ஜீவன் இருக்காது.
திறமையான பாடகர் பாடகிகளுக்கு வாய்ப்பளிக்க இணையதளத்தில் குரல் வங்கியொன்றை தொடங்கியுள்ளேன்," என்றவரிடம், ஏன் இசையமைப்பதைக் குறைத்துக் கொண்டீர்கள் என்று கேட்டபோது, "பூ, களவாணி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தேன். தேநீர் விடுதி, கேரள நாட்டிளம் பெண்களுடனே போன்ற படங்களை இயக்கினேன்.
தற்போது இயக்குவதை நிறுத்தி வைத்து விட்டு முழு நேர இசையமைப்பாளராக இறங்கியுள்ளேன். இனிப்பு காரம் மற்றும் அங்காடி தெருவின் கன்னட ரீமேக் படங்களுக்கு இப்போது இசையமைத்துக் கொண்டிருக்கிறேன்," என்றார் எஸ்எஸ் குமரன்.
Post a Comment