சென்னை: கோச்சடையான் படத்துக்கு நீதிமன்ற உத்தரவையும் மீறி மக்களிடம் கேளிக்கை வரி வசூலித்தது நீதிமன்ற அவமதிப்பாகும். இதில் நடவடிக்கை எடுக்கத் தவறிய தமிழக அரசின் செயல் கண்டனத்துக்குரியது என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த வக்கீல் முத்தையா உயர்நீதிமன்றத்தில் இன்று ‘கோச்சடையான்' படத்துக்கு கேளிக்கை வரி வசூல் விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், "கோச்சடையான் படத்துக்கு வணிக வரித்துறை கேளிக்கை வரி விலக்கு அளித்து கடந்த மே 12-ந் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்தேன்.
அப்போது நீதிமன்றம் கோச்சடையான் படத்துக்கு கேளிக்கை வரி விலக்கு அளித்தது சரிதான் என்றும் இந்த படத்தை பார்க்க வரும் பொதுமக்களிடம் இருந்து கேளிக்கை வரியை தியேட்டர் உரிமையாளர்கள் வசூலிக்க கூடாது என்றும் கடந்த மே 22-ல் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் தமிழகம் முழுவதும் கோச்சடையான் படத்தை திரையிட்ட தியேட்டர் உரிமையாளர்கள் பொதுமக்களிடம் இருந்து கேளிக்கை வரி வசூலித்துள்ளனர்.
சில தியேட்டர் உரிமையாளர்கள் நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தை விட கூடுதல் கட்டணமும் வசூலித்திருக்கிறார்கள்.
இது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயலாகும். கூடுதல் கட்டணம் வசூலித்த தியேட்டர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வில்லை," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ்குமார், நீதிபதி சுந்தரேஷ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது, "கோச்சடையான் படத்துக்கு பொது மக்களிடம் இருந்து கேளிக்கை வரி வசூலிக்க கூடாது என்று இந்த நீதிமன்றம் உத்தரவிட்டும் கேளிக்கை வரி வசூலித்த தியேட்டர் உரிமையாளர்கள் மீது தமிழக வணிகவரி துறை முதன்மை செயலாளர் மற்றும் கமிஷனர் ஆகியோர் நடவடிக்கை எடுக்காதது கண்டனத்துக்குரியது.
இந்த மனுவுக்கு சரியான பதில் மனுவை வணிக வரிதுறை முதன்மை செயலாளரும், கமிஷனரும் ஒரு வாரத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்," என்று கூறினர்.
Post a Comment