மும்பை: முன்னாள் நடிகையும், முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸாருதீனின் மனைவியுமான சங்கீதா பிஜ்லானியின் வேலைக்காரப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கைதாகியுள்ளார் நடிகர் ஷாருக் கானின் வாகன டிரைவர்.
அவரது பெயர் ராஜேந்திர கெளதம் எனப்படும் பின்டு மிஸ்ரா. 34 வயதாகிறது. புதன்கிழமை மாலையில் இவரை பந்த்ரா போலீஸார் கைது செய்தனர்.
ஷாருக் கானின் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாராம் பின்டு. தனிப்பட்ட ஓட்டுநராக இதுவரை பணியாற்றியதில்லையாம். அதேசமயம், ஷாருக்கின் குழந்தைகளை வீட்டுக்கும், பள்ளிக்கும் கூட்டிச் செல்வது இவரது வேலை என்றும் கூறப்படுகிறது.
ஷாருக் கானின் ஓட்டுநர் என்று கூறி அந்த வேலைக்காரப் பெண்ணிடமும் அறிமுகம் செய்து கொண்டு பழகியுள்ளார் பின்டு. அந்தப் பெண் மகாராஷ்டிர மாநிலம் லட்டூரைச் சேர்ந்தவர். மும்பையில் தங்கி சங்கீதா வீட்டில் வேலை பார்த்து வந்தார். அந்தப் பெண்ணின் தொலைபேசி எண்ணையும் வாங்கி வைத்துக் கொண்டு அடிக்கடி பேசியுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வயது 17 என்று கூறப்படுகிறது. ஷாருக் கான் வீட்டில் அவருக்கு வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டிப் பழகியுள்ளார். பின்னர் அவரை நலோஸ்போராவில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்துள்ளாராம்.
இந்த காரியத்தில் ஈடுபடுவதற்கு முன்பு ஒருமுறை வேலைக்காரப் பெண்ணின் எண்ணுக்கு தொலைபேசி செய்துள்ளார் பின்டு. அப்போது சங்கீதா பிஜ்லானியே பேசியுள்ளார். அப்போதுதான் தனது வேலைக்காரப் பெண் வேலையை விடவிருப்பது குறித்து அவருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து அவர் உடனடியாக அப்பெண்ணை வேலையை விட்டு நீக்கி விட்டாராம்.
இதனால் வேறு வழியில்லாமல் பின்டுவை நம்பி வந்துள்ளார் அப்பெண். அதைப் பயன்படுத்திக் கொண்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் பின்டு.
தற்போது போலீஸார் பின்டு மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Post a Comment