சென்னை: நடிகை ப்ரியங்காவை ஓங்கி கன்னத்தில் அடித்து காயம் ஏற்படுத்தியுள்ளார் இயக்குநர் களஞ்சியம். இதனால் நடிகையின் தந்தை ஆவேசப்பட்டு, போலீசில் புகார் தர யோசித்து வருகிறார்.
கங்காரு படத்தில் நடித்துள்ள ப்ரியங்கா, இப்போது கோடை மழை என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரியங்காவின் அண்ணன் வேடத்தில் இயக்குநர் களஞ்சியம் நடிக்கிறார்.
இதன் படப்பிடிப்பு சங்கரன் கோவில் பகுதியில் நடந்து வருகிறது.
பிரியங்காவுக்கும் களஞ்சியத்துக்கும் வாக்கு வாதம் நடப்பது போலவும், அப்போது கோபமாகி பிரியங்கா கன்னத்தில் களஞ்சியம் அறைவது போலவும் ஒரு காட்சியை எடுத்தனர்.
இதில் களஞ்சியம் நிஜமாகவே கன்னத்தில் ஓங்கி அறைந்து விட்டாராம். இதனால் பிரியங்கா நிலை குலைந்து மயங்கி விழுந்தார். காது கிழிந்து ரத்தம் வழிந்துள்ளது.
உடனடியாக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. இந்தக் காட்சிக்கான ஒத்திகையின்போதும் பலமாக அறைந்துள்ளார் களஞ்சியம்.
களஞ்சியம் மீது இதுவரை புகார் அளிக்கவில்லை பிரியங்காவின் தந்தை. இதுகுறித்து அவர் கூறுகையில், "களஞ்சியம் முதல் முறை அடித்தபோதே என் மகள் பிரியங்காவுக்கு கன்னத்தில் வலி ஏற்பட்டுள்ளது. இதை அவரிடம் குறிப்பிட்டுச் சொன்ன பிறகும், வேண்டும் என்றே ஓங்கி அறைந்துள்ளார். காதில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மருத்துவ அறிக்கையில் மோசமான காயம் ஏற்பட்டுள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. களஞ்சியத்துக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கும்படி டாக்டர்கள் கூறியுள்ளனர். புகார் அளிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்," என்றார்.
+ comments + 1 comments
Rowdy kalanjiyam should be taught a lesson
Post a Comment