சென்னை: வாலிபக் கவி வாலி... மறைந்து ஒரு வருடமாகி விட்டது. இதையொட்டி இன்று சென்னையில் ஒரு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சாகாவரம் படைத்த அழகான காதல் பாடல்கள் பலவற்றைக் கொடுத்தவர் வாலி. எம்.ஜி.ஆர். முதல் சிம்பு, தனுஷ் வரைக்கும் இவர் பாடல் எழுதாத நடிகர்களே கிடையாது.
யார் யாருக்கு என்ன மாதிரியான பாடல்கள் வேண்டுமோ, பொருந்துமோ, அதை அப்படி அப்படியேக் கொடுத்து அசத்தியவர் வாலி.
ஐந்து தமிழக அரசின் விருதுகளைப் பெற்றவர். பத்மஸ்ரீ விருது பெற்றவர். பல்வேறு சாதனைகளைப் படைத்தவர். 15,000க்கும் மேற்பட்ட பாடல்களைப் புனைந்தவர், பல அருமையான நூல்களை எழுதியவர்.
எம்.ஜி.ஆருக்கு இவர் எழுதிய பாடல்கள் பல இன்றளவும் அவர் பெயரைச் சொல்லியபடி காற்றில் உலவிக் கொண்டுள்ளன. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி மரணமடைந்தார் வாலி.
வாலியின் முதலாமாண்டு நினைவையொட்டி தமிழ் சிமிழ் சார்பில் இன்று ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், நா. முத்துக்குமார், பா.விஜய் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
Post a Comment