சென்னை: எம்.ஜி.ஆர். அரசு திரைப்பட பயிற்சி நிறுவன வளாகத்தில் ரூ.15 கோடியில் இரண்டு நவீன வசதிகளுடன் கூடிய படப்பிடிப்புத் தளங்கள் அமைக்கப்படும் என்ற முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளம் தனது நன்றியினைத் தெரிவித்துள்ளது.
கடந்த திங்களன்று சட்டசபையில் விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அதில், புதிய படப்பிடிப்புத் தளங்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் கோரிக்கை தொடர்பாக அறிவிப்பு ஒன்றை விடுத்தார்.
அதாவது, அந்தக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், எம்.ஜி.ஆர். அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் காலியாகவுள்ள 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.15 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய முழுவதும் குளிரூட்டப்பட்ட இரண்டு படப்பிடிப்புத் தளங்கள் அமைக்கப்படும் என முதல்வர் அறிவித்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தனது நன்றியினைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-
எங்களது நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றை பரிசீலனை செய்து 14.07.2014 அன்று சட்டசபையில் எம்.ஜி.ஆர். அரசு திரைப்பட கல்லூரி மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய இரண்டு படப்பிடிப்பு அரங்குகளைத் திறப்பதாக அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பாக எங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
Post a Comment