சிங்கம், சிங்கம் 2 படங்களின் வெற்றியைத் தொடர்ந்து சிங்கம் 3 படத்தை உருவாக்குகிறார்கள் இயக்குநர் ஹரியும் நடிகர் சூர்யாவும்.
தமிழ் சினிமாவில் வணிக ரீதியான வெற்றிப் படங்களை இயக்குவதில் ஸ்பெஷலிஸ்ட் என பெயர் பெற்றவர் ஹரி. இவர் இயக்கத்தில் சூர்யா நடித்த படங்கள் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளன.
இருவரும் முதலில் இணைந்த படம் ஆறு. அந்த வெற்றியைத் தொடர்ந்து வேல் படத்தில் இணைந்தனர். அந்தப் படமும் பெரிய வெற்றியைப் பெற்றது.
அடுத்து சிங்கம் மற்றும் அதன் தொடர்ச்சியாக சிங்கம் 2 படங்களில் இணைந்தனர். இரு படங்களுமே வசூலில் சாதனைப் படைத்தன.
சிங்கம் 2 படத்தின் க்ளைமாக்ஸில், அடுத்த பாகத்தைத் தொடர்வதற்கு வசதியாக காட்சியமைத்திருந்தனர். இப்போது சிங்கம் 3-க்கான வேலைகளில் இறங்கியுள்ளனர்.
இயக்குனர் ஹரி ‘சிங்கம் 3' படத்திற்காக நான்கு கதைகள் தயார் செய்து அதனை சூர்யாவிடம் கொடுத்துள்ளார். அவற்றில் ஒரு கதை சூர்யாவுக்கு மிகவும் பிடித்துப் போனதால், அடுத்து அந்தப் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளாராம்.
இந்தக் கதையில் முழுக்க முழுக்க காக்கிச் சட்டை அணியாத ஒரு போலீசாக வருகிறாராம் சூர்யா.
தற்போது ஹரி, விஷால்-சுருதிஹாசன் நடிக்கும் பூஜை படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட்ட முடிவுசெய்துள்ளனர். அதேபோல சூர்யா, வெங்கட் பிரபுவின் மாஸ் படத்தில் நடிக்கிறார். இந்தப் படம் முடிந்ததும் ஹரியும் சூர்யாவும் ‘சிங்கம் 3'-யைத் தொடங்கவிருக்கின்றனர்.
Post a Comment