சென்னை: எனக்கு உடல்நிலை சரியாகிவிட்டது... நன்றாக இருக்கிறேன் என நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.
நடிகர் கார்த்திக்கு நேற்று மாலை திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அவர் சாப்பிட்ட உணவு விஷமாக மாறியதால் உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.
அத்துடன் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டதால் சோர்வும் ஏற்பட்டது. டாக்டர்கள் கார்த்திக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இன்று காலையும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து உடல்நிலை சீரானது.
இதுகுறித்து கார்த்தி தனது பேஸ்புக்கில், "எனது உடல்நிலை பூரண குணமாகிவிட்டது. தற்போது நலமுடன் இருக்கிறேன். எல்லோருக்கும் ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
கார்த்தி தற்போது ‘கொம்பன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை குட்டிப்புலி படத்தை இயக்கிய முத்தையா இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு ஒரு மாதமாக கமுதியில் நடந்தது.
கார்த்தியும், லட்சுமிமேனனும் அங்கு முகாமிட்டு நடித்து வந்தனர். இரு தினங்களுக்கு முன்பு படப்பிடிப்பை முடித்து விட்டு கார்த்தி சென்னை திரும்பிய பிறகுதான் அவருக்கு சுகவீனம் ஏற்பட்டது.
Post a Comment