கட்டிடத் தொழிலாளர்களின் பாதுகாப்பில் அக்கறை தேவை: "ரமணா" ஏ.ஆர்.முருகதாஸ்

|

சென்னை: கட்டிட கட்டுமானப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்களின் பாதுகாப்பில் அக்கறை காட்டவேண்டும் என்று ரமணா திரைப்பட இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார்.

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கத்தில் கடந்த சனிக்கிழமையன்று 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கட்டிடத் தொழிலாளர்களின் பாதுகாப்பில் அக்கறை தேவை:

இந்த விபத்து நடந்த உடனேயே கடந்த 12 வருடங்களுக்கு முன்பு விஜயகாந்த் நடித்து இயக்குநர் முருகதாஸ் இயக்கிய ரமணா திரைப்படம்தான் அனைவரின் நினைவுக்கு வந்தது.

தற்போது 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்தும் கருத்து கூறியுள்ள இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ், குஜராத் பூகம்பம் ஏற்படுத்திய பாதிப்பில்தான் அந்தக் காட்சியை ரமணா படத்தில் வைத்தேன் என்றார்.

இந்தியாவில் இதுபோன்று நிகழ்வுகள் அடிக்கடி நடக்கின்றன. சமீபத்தில்கூட மும்பையில் 6 மாடி கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. பொதுவாகவே அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டும்போது, கட்டுமானப் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது.

2 அல்லது 3 ஆண்டுகள் கட்டுமானப் பணி நடக்கும் நிலையில், அங்கு வேலை செய்பவர்களின் பாதுகாப்பு குறித்து யாரும் கவலைப்படுவதில்லை. கட்டுமானப் பணியில் ஈடுபடும் பெரும்பாலானோர் ஆந்திரா, பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து குடும்பத்துடன் வருபவர்கள். அவர்களுக்கு கொடுக்கும் ஊதியமும் மிகவும் குறைவானது. எனவே வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும். அதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற விபத்துக்களை குறைக்க முடியும் என்றும் முருகதாஸ் கூறியுள்ளார்.

 

Post a Comment