அஜீத் பட இயக்குனர் கவிகாளிதாஸ் திடீரென மரணம் அடைந்தார்

|

திரைப்பட இயக்குநர் கவிகாளிதாஸ் உடல்நலக் கோளாறு காரணமாக திடீர் மரணமடைந்தார். அவருக்கு வயது 45.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள கொல்லபாளையத்தை சேர்ந்தவர் கவிகாளிதாஸ் (வயது 45). திரைப்பட இயக்குனர். இவருடைய மனைவி பிரியா (25), இவர்களுக்கு மூன்று வயதில் அஷ்மிதா என்ற குழந்தை உள்ளது.

அஜீத் பட இயக்குனர் கவிகாளிதாஸ் திடீரென மரணம் அடைந்தார்

அஜீத் பட இயக்குநர்

நடிகர் அஜீத் நடித்த ‘உன்னைக்கொடு என்னை தருவேன்‘ என்ற படத்தை கவிகாளிதாஸ் இயக்கியுள்ளார். மேலும் திரைப்பட இயக்குனர் பாக்யராஜிடம், ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, சித்து பிளஸ்2, பாரிஜாதம், சொக்கத்தங்கம்‘ போன்ற திரைப்படங்களில் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய ‘பீமாபுரம் பெல்லாடு‘ என்ற படத்திற்கு கதை வசனமும் எழுதி உள்ளார்.

படம் இயக்கத்திட்டம்

தற்போது பாடலாசிரியரும், நடிகருமான பா.விஜயை வைத்து ‘ராஜகுமாரனும், மந்திரிமார்களும்‘ என்ற படத்தை இயக்க கவிகாளிதாஸ் முயற்சித்து வந்தார். இந்தநிலையில்தான் கடந்த சில நாட்களாக மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் சிகிச்சை

கடந்த 20 ஆண்டுகளாக சென்னை டிரஸ்ட்புரத்தில் பாடலாசிரியர் வைரமுத்துவின் பக்கத்து வீட்டில் குடும்பத்துடன் வசித்துவந்த கவிகாளிதாஸ், சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அந்தியூர் வீட்டில்

மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் நோய் குணமாகவில்லை. உயிரை காப்பாற்ற முடியாத நிலை ஏற்பட்டதால், அவரை வீட்டிற்கு அழைத்து செல்ல டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதைத்தொடர்ந்து அந்தியூர் கொல்லபாளையத்தில் உள்ள அவருடைய சொந்த வீட்டிற்கு கவிகாளிதாஸ் அழைத்து வரப்பட்டார்.

மோசமான உடல்நிலை

இந்தநிலையில் நேற்று மதியம் 2.30 மணி அளவில் கவிகாளிதாசின் உடல்நிலை மேலும் மோசமடைந்தது. சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. அப்போது அவருடைய மனைவி பிரியா மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

அந்தியூரைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பிரமுகர்கள் கவிகாளிதாசின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து மாலை அந்தியூர் பெரிய ஏரியில் கவிகாளிதாசின் உடல் எரியூட்டப்பட்டது.

 

Post a Comment