சென்னை: சென்னை தரமணியில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். திரைப்பட நகரில் 15 கோடி ரூபாய் செலவில் புதிதாக இரண்டு ஏசி படப்பிடிப்பு அரங்கம் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சில தினங்களுக்கு முன்னர் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
முதல்வரின் இந்த அறிவிப்பிற்கு ஃபெஃப்சியின் தலைவர் அமீர் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து ஃபெஃப்சியின் தலைவர் அமீர், விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
‘‘மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களுக்கு வணக்கம்! எங்களது நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றினை பரிசீலனை செய்து 14.7.2014 அன்று சட்ட சபையில் எம்.ஜி.ஆர். அரசு திரைப்பட கல்லூரி மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய இரண்டு குளிரூட்டப்பட்ட படப்பிடிப்பு அரங்கங்களை திறப்பதாக அறிவிப்பு செய்துள்ளீர்கள். இதற்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் சார்பாக உங்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்'' என அதில் கூறியுள்ளனர்.
கேயார் பாராட்டு
இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் கேயார் விடுத்துள்ள ஒரு அறிக்கையில் ‘‘ முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு முறையும் திரையுலகுக்கு வரிச்சலுகை, மானியம், திரைப்பட நகரம், திருட்டு வி.சி.டி. ஒழிப்பு என பல உதவிகளை செய்து இருக்கிறார். சில உதவிகளை கேட்டும் செய்து இருக்கிறார். சில உதவிகளை கேட்காமலும் செய்து இருக்கிறார்.
சினிமா நூற்றாண்டு விழா
அவர் மூன்றாவது முறையாக முதல்வர் ஆனபின், இந்திய திரையுலகமே வியக்கும் வகையில், சினிமா நூற்றாண்டு விழாவை தமிழ்நாட்டில் நடத்தியது வரலாற்றில் இடம்பெற வேண்டிய ஒன்றாகும்.
தேசிய விருதுக்கு சமம்
அதிலும் குறிப்பாக ஜனாதிபதியை அந்த விழாவுக்கு அழைத்து, அவர் கையினால் கலைஞர்களுக்கு விருது வழங்க செய்து, தேசிய விருது வழங்கும் விழாவுக்கு சமமாக நடத்தப்பட்டது. அதற்கு காரணமாக இருந்த முதல்வர் ஜெயலலிதாவை கலையுலகம் பாராட்டாமல் இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.
Post a Comment