சென்னை: ராஜபக்சேவின் தொழில் கூட்டாளியான லைக்கா மொபைல் நிறுவனம் தயாரித்து, விஜய் நடித்துள்ள கத்தி படத்தை வெளியிடக் கூடாது எனக் கூறி மாணவர் அமைப்பு விநியோகஸ்தர்களிடம் புகார் தர முடிவு செய்துள்ளது.
விஜய் நடிப்பில், ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள படம் கத்தி.
இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்தே பெரும் சர்ச்சை மற்றும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது.
காரணம் அதன் தயாரிப்பாளர்கள். இந்தப் படத்தை முதலில் தயாரிப்பதாக அறிவித்தது அய்ங்கரன் நிறுவனம். பின்னர் லைக்கா மொபைல் நிறுவனம் அவர்களுடன் கைகோர்த்தது. பின்னர் அய்ங்கரன் துணையுடன் முற்று முழுதாக லைக்கா மொபைல் நிறுவனமே கத்தி படத்தைத் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வந்ததிலிருந்தே படத்துக்கு எதிரான கோஷங்கள் கிளம்பிவிட்டன. தமிழினப் படுகொலை செய்த ராஜபக்சேவின் கூட்டாளிகளான லைக்கா மொபைல்காரர்கள் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிப்பதா என்ற எதிர்க்குரல்கள் பலமாக ஒலித்தாலும், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் படத்தை இயக்கினார் முருகதாஸ்.
மேலும் இந்த நிறுவனத்துக்காக படங்கள் இயக்க தமிழ் சினிமாவில் ஆள்பிடிக்கும் வேலையையும் அவர் செய்வதாக புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில், லைக்கா மொபைல் நிறுவனத்தினரின் குடும்ப நிகழ்ச்சிக்கும் சத்தமின்றி போய் வந்திருக்கிறார் படத்தின் ஹீரோ விஜய்.
இப்போது, படத்தை உலகின் எந்தப் பகுதியிலும் வெளியிடவே கூடாது எனக் கூறி மாணவர் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.
முதல் கட்டமாக வரும் செவ்வாய்க்கிழமை தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினரை சந்தித்து சிங்கள இனவேறியர்களின் பணத்தில் விஐய் நடிக்கும் கத்தி திரைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்தப் போவதாக முற்போக்கு மாணவர் முன்னணி என்ற அமைப்பு அறிவித்துள்ளது.
Post a Comment