பணமோசடி: ஓம் சாந்தி ஓம் திரைப்பட தயாரிப்பு நிர்வாகிகள் கைது

|

சென்னை: போலியாக கணக்கு எழுதி ரூ.46 லட்சம் பணமோசடி செய்ததாக திரைப்பட தயாரிப்பாளர் அளித்த புகாரின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீகாந்த், புதுமுகம் நீலம் உபாத்யாயா நடித்து வரும் படம் ஓம் சாந்தி ஓம். சூர்ய பிரபாகர் இயக்கி வருகிறார். 8 பாயிண்ட் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் அருமை சந்திரன் தயாரித்து வருகிறார். இந்தப் படம் நீண்ட நாள் தயாரிப்பில் இருக்கிறது.

தயாரிப்பாளர் அருமை சந்திரன் சென்னை பெருநகர காவல் துறையின் மத்திய பிரிவில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் சிங்கப்பூரில் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்து வருகிறேன். இதனால் அவர் படத் தயாரிப்பு பொறுப்பை ராஜசேகர், செந்தில்குமார், தினேஷ்குமார் ஆகியோரிடம் ஒப்படைத்திருந்தேன்.

படத்தில் பணியாற்றி நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சம்பளத்தை குறைவாக கொடுத்து முழு சம்பளமும் கொடுத்துவிட்டதாக கணக்கு எழுதியுள்ளனர். இவர்களே போலி ரசீது தயாரித்து 46 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

படத்தின் தயாரிப்பாளர் அருமை சந்திரனின் புகாரின் பேரில் படத்தின் தயாரிப்பு நிர்வாகிகள் ராஜசேகர், செந்தில்குமார், தினேஷ் குமார் ஆகிய 3 பேரை போலீஸ் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து போலி பில்கள், வவுச்சர்கள் மற்றும் லேப் டாப்பை கைப்பற்றி உள்ளனர்.

 

Post a Comment