இன்றைய தலைவர்களுக்கு காமராஜர் பற்றி பாடம் நடத்த வேண்டும்! - பாரதிராஜா

|

திருப்பத்தூர் (வேலூர்): இன்றைய அரசியல் தலைவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் பற்றி பாடம் நடத்த வேண்டும் என்று இயக்குநர் பாரதிராஜா கேட்டுக் கொண்டார்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் செயல்பட்டு வரும் காமராஜர் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை சார்பில், காமராஜரின் 112 - வது பிறந்த நாள் விழா ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

இன்றைய தலைவர்களுக்கு காமராஜர் பற்றி பாடம் நடத்த வேண்டும்! - பாரதிராஜா

பிற்பகல் 2.30 மணிக்கு மாணவர் அரங்கம் நிகழ்ச்சியும், 3 மணிக்கு ‘படிக்காத மேதையிடம் நாம் படிக்க வேண்டிய பாடம்... நிர்வாகத்திறனா? அல்லது நெறி பிறழா அரசியலா?' என்ற தலைப்பில் பட்டிமன்றமும் நடந்தன.

மாலையில் 4000 மாணவ- மாணவிகளுக்கு இயக்குநர் பாரதிராஜா மூலம் சீருடை வழங்கும் விழா நடந்தது.

நிகழ்ச்சியின் நிறைவில் பாரதிராஜா பேசுகையில், "பெற்ற தாய், தந்தை பற்றி பேசுவதற்கு குறிப்பு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுபோலத்தான் என் தலைவன் காமராஜரை பற்றி பேசுவதற்கும் குறிப்பு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

அவர் வாழ்ந்த காலத்தில் அவரை என்னால் பாராட்ட முடியவில்லை. அவரை முழுமையாக பாராட்ட இங்கு ஒரு மேடை கிடைத்திருப்பது மிகவும் சந்தோஷம்.

காமராஜருக்கு பிறகு எத்தனையோ அரசியல் கட்சிகள், தலைவர்கள் வந்தார்கள். ஆனால் காமராஜரைப் போல யாரும் இதுவரை வரவில்லை.

மேடை நாகரீகத்தை காமராஜரிடம்தான் கற்றுக்கொள்ள வேண்டும். அவரது பேச்சில் தனி மனித விமர்சனம் இருக்காது. ஆனால் இன்றைய அரசியலில் அப்படி இல்லை. சாதி, மதம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அகற்றுவதற்காக பள்ளிகளில் சீருடை பழக்கத்தை கொண்டு வந்தவர் காமராஜர். மதிய உணவை கொண்டு மாணவர்களின் வயிற்றைக் குளிர வைத்தவர் பெருந்தலைவர்.

தான் படிக்கவில்லை, இந்த சமுதாயமாவது படித்து முன்னேற வேண்டும் என நினைத்து பல ஆயிரம் பள்ளிகளைத் திறந்தவர். மண்ணுலகில் வாழ்ந்த ஒரு மாமனிதர். சமுதாய நோக்கம் கொண்ட ஒரே தலைவர்.

உடம்புதான் கறுப்பு, மனசு வெள்ளை. கோபம் வந்தால் கொட்டி தீர்த்து விடுவார். மனதில் வைத்துக் கொள்ளமாட்டார். பொய்மை இல்லாதவர். தூய்மையான தலைவர். இங்கு நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் அவரது ஆன்மா எங்கோ இருந்து கேட்டுக் கொண்டுதான் இருக்கும். கேட்ட பிறகு அந்த ஆன்மா என்னை (பாரதிராஜா) ஆசீர்வதிக்கும்.

இன்றைய அரசியல்வாதிகளுக்கு காமராஜர், கக்கன் பற்றி பாடம் நடத்த வேண்டும்.

தமிழ் சமுதாய மக்கள் படித்து மேலே வந்ததற்கு காரணம் காமராஜர்தான். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை வேலையில் புரட்டி எடுப்பதில் வல்லவர். நேர்மையான தமிழன், தொண்டன். எல்லாவற்றையும் காட்டிலும் நேர்மையான மனிதன்," என்றார்.

 

Post a Comment