இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள இந்தி நடிகர் திலீப் குமாரின் வீட்டை அந்நாட்டு அரசு தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவித்துள்ளது.
இந்தி நடிகர் திலீப் குமாரின் இயற்பெயர் யூசுப் கான். 91 வயதாகும் அவர் பாகிஸ்தானில் உள்ள கைபர் படுங்க்வா மாகாணத்தில் பிறந்தவர். அவருடைய பூர்வீக வீடு பெஷாவரில் உள்ளது. திலீப் குமார் இந்தியாவில் வசித்து வருவதால் அவரது பூர்வீக வீடு பராமரிப்பு இன்றி கிடந்தது.
இந்நிலையில் திலீப்பின் வீட்டை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று கைபர் படுங்க்வா மாகாண அரசு நவாஸ் ஷெரீஃப் அரசுக்கு கோரிக்கை விடுத்தது. அந்த வீட்டை தேசிய பாரம்பரிய சின்னமாக்கினால் இந்தியா, பாகிஸ்தான் மக்களிடையேயான உறவை மேம்படுத்த உதவியாக இருக்கும் என்று மாகாண அரசு தெரிவித்திருந்தது.
மாகாண அரசின் கோரிக்கையை ஏற்று திலீப் குமாரின் வீட்டை தேசிய பாரம்பரிய சின்னமாக மாற்றுமாறு நவாஸ் ஷெரீஃப் உத்தரவிட்டதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான கலாச்சார உறவை மேம்படுத்த விரும்புகிறாராம் ஷெரீஃப். அவர் தனது இந்திய பயணத்தின்போது பாலிவுட் பிரதிநிதிகளை சந்தித்து பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது.
Post a Comment