லோயர் கேம்ப், கூடலூர்: ஒன் இந்தியா இணைய தளத்தில் இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு தொடராக வெளிவருகிறது.
இளையராஜாவின் முன்னிலையில் அவரது லோயர்கேம்ப் இல்லத்தில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
உலக இசை மேதைகளுள் முதன்மையானவராகக் கருதப்படும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளியிடப்பட வேண்டும் என்பது பல தரப்பினரும் தொடர்ந்து கூறி வரும் ஒன்றாகும்.
இந்த நிலையில்தான் ஒன்இந்தியா இணைய தளத்தில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தனது வாழ்க்கை வரலாற்றை அனுபவத் தொடராக எழுதவேண்டுமென நாம் இசைஞானி இளையராஜாவைக் கேட்டுக் கொண்டோம்.
பலமுறை அவரிடம் இதுபற்றி நாம் தொடர்ந்து கேட்டுக் கொண்டதால், முதல் முறையாக தனது வாழ்க்கை அனுபவங்களைத் தொடராக வெளியிட ஒப்புதல் தந்தார்.
நேற்று லோயர் கேம்பில் நடந்த இசைஞானி ஃபேன்ஸ் கிளப் ரசிகர்கள் கருத்தரங்கில் பேசிய நடிகர் ராஜேஷ், இசைஞானியின் வாழ்க்கை வரலாறு புத்தகமாக பதிவு செய்யப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
இதனைத் தொடர்ந்து, இசைஞானி வாழ்க்கை வரலாறு ஒன்இந்தியாவில் தொடராக வரவிருப்பதை ஒரு அறிவிப்பாக இளையராஜா முன்னிலையில் அவரது உதவியாளர் தேனி கண்ணன் அறிவித்தார். அதனை மேடையில் இருந்த இளையராஜாவும் ஆமோதித்தார்.
விரைவில் இந்தத் தொடர் வெளியாகும் தேதியை இசைஞானியே அறிவிப்பார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உலகெங்கும் உள்ள இசைஞானியின் ரசிகர்கள் தொடர்ந்து ஒன்இந்தியாவுடன் இணைந்திருங்கள்... இசைஞானியின் வாழ்க்கைத் தொடரைப் படித்துப் பரவசப்படுங்கள்.
Post a Comment