திரையுலகினர் பலர் தங்கள் பெயர்களுக்கு முன் சாதிப் பெயரைச் சேர்த்துக் கொள்வது இப்போது சாதாரணமாகிவிட்டது.
அதுவும் சாதாரண சாதிக்காரர்கள் யாரும் அப்படி போட்டுக் கொள்வதில்லை. சிலர் நரேஷ் அய்யர், மகாலட்சுமி அய்யர், ஜனனி அய்யர், பல்ராம் அய்யர் என வெளிப்படையாகப் போட்டுக் கொள்கின்றனர். அதை பெருமையாக மேடைகளில் சொல்லிக் கொள்ளத் தவறுவதில்லை.
ஒரு முறை ஜனனி அய்யர் என்ற நடிகையிடம், ஏன் இந்த அய்யர் என்ற சாதி அடையாளத்தை விடாமல் தொடர்கிறீர்கள் என்ற கேட்டதற்கு, அது என் பெருமை. நீக்க முடியாது என்றார் திமிருடன்.
இப்படிப்பட்ட சினிமாக்காரர்களுக்கு மத்தியில் ஒரு நடிகை தன் பெயருடன் சாதியை சேர்த்து அழைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர்தான் பார்வதி.
தமிழில் ‘பூ' படம் மூலம் அறிமுகமானவர் பார்வதி. கேரளாவில் பிறந்த இவர் மலையாளம், கன்னடம் மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார். 2006-ல் மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அதன்பிறகு தொடர்ந்து 4 படங்கள் மலையாளத்தில் நடித்தாலும் தமிழில் வெளியான ‘பூ' படம் இவருக்கு நடிகைக்கான அந்தஸ்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இப்படத்திற்காக இவர் பல விருதுகள் பெற்றுள்ளார்.
பின்னர் ‘சென்னையில் ஒரு நாள்', தனுஷுடன் இணைந்து ‘மரியான்' படங்களில் நடித்தார். தற்போது கமல் ஹாசன் நடிக்கும் ‘உத்தம வில்லன்' படத்தில் நடித்து வருகிறார்.
தன் பெயரை பார்வதி மேனன் என்று அழைப்பதைத் அடியோடு தவிர்க்குமாறு அவர் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறுகையில், "என் பெயரை பார்வதி மேனன் என்று அழைக்கிறார்கள். அப்படி என்னை அழைக்காதீர்கள். என் பெயர் பார்வதி என்பது மட்டுமே. பாஸ்போர்ட்டில் கூட பார்வதி என்றுதான் இருக்கிறது. அப்படி என்னைக் கூப்பிட்டால் மட்டும் போதும்.
ஒரு கன்னட படத்தில் என் பெயரை பார்வதி மேனன் என்று போட்டார்கள். அதிலிருந்து அனைவரும் என்னை அப்படியே கூப்பிடுகிறார்கள். ஆதலால் என் பெயரில் உள்ள மேனனை தூக்கிவிட்டு பார்வதி என்றே அழையுங்கள். நானாக இருந்தால் போதும்.. சாதி அடையாளம் வேண்டாம்," என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Post a Comment