சீனு ராமசாமி என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது. அவர் என்னைச் சந்தித்ததாகவும், அவர் குறிப்பிடும் ஒருவர் எழுதிய பாடலை நான் பாடப் போவதாகவும் கூறுவது வேடிக்கையானது, என்று கேள்வி எழுப்பியுள்ளார் இசைஞானி இளையராஜா.
கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை போன்ற படங்களைத் தொடர்ந்து, இப்போது இடம் பொருள் ஏவல் என்ற படத்தை இயக்கி வருகிறார் சீனு ராமசாமி. இவரது படத்துக்கு முதல் முறையாக யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதுகிறார். வைரமுத்துவுடன் யுவன் சங்கர் ராஜா இணைவது இதுவே முதல் முறை. இந்த ஒரு விஷயத்தை வைத்துக் கொண்டு, இஷ்டத்துக்கும் தவறான செய்தி பரப்பப்பட்டு வருகிறது. இளையராஜா பெயரையும் தேவையில்லாமல் இழுத்து, விளம்பரம் தேடப் பார்க்கிறார் சீனு ராமசாமி என்ற குற்றச்சாட்டு பகிரங்கமாகவே எழுந்துள்ளது.
ஏற்கெனவே இந்தப் படத்தின் கதாநாயகி மனீஷா விஷயத்தில் சர்ச்சையில் சிக்கினார் சீனு ராமசாமி.
இப்போது இடம் பொருள் ஏவல் படத்தின் ஒரு பாடலை இளையராஜா பாடப் போகிறார் என கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதனை இளையராஜா தரப்பு மறுத்துவிட்டது. இதுகுறித்து நாம் ஏற்கெனவே செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம்.
ஆனால் பிரபல நாளிதழ் ஒன்றில் இன்று பேட்டியளித்துள்ள சீனு ராமசாமி, தான் இளையராஜாவைச் சந்தித்துப் பேசியதாகவும், அப்போது, வைரமுத்து எழுதிய ஒரு அம்மா பாடலைப் பாட இளையராஜா சம்மதித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு யுவன் சங்கர் ராஜா ஏற்பாடு செய்ததாகவும், விரைவில் இந்தப் பாடல் பதிவு நடக்கவிருக்கிறது என்றும் சீனு ராமசாமி கூறியுள்ளார்.
சீனு ராமசாமியா? அது யாரு?
சீனு ராமசாமியின் இந்தப் பேட்டிக்கு இளையராஜா கடும் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "சீனு ராமசாமியை யார் என்றே எனக்குத் தெரியாது. அப்படி ஒருவர் என்னைச் சந்திக்கவும் இல்லை..," என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து இளையராஜா தரப்பில் மேலும் விசாரித்த போது, "எப்படியாவது இளையராஜாவுடன் மீண்டும் கைகோர்த்துவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகிறார் வைரமுத்து. அதற்கு இயக்குநர் பாலாவைப் பயன்படுத்திப் பார்த்தார். ஆனால் ராஜா சார் தன் முடிவிலிருந்து மாறவில்லை. துரோகங்களை அவ்வளவு சுலபத்தில் அவரால் மறக்க முடியாது. இப்போது, ராஜா சாரின் மகனை வைத்து எப்படியாவது மீண்டும் பிரசாத் ஒலிப்பதிவுக் கூடம் பக்கம் வர முயற்சிக்கிறார் வைரமுத்து. அதை ராஜா சார் ஒருபோதும் விரும்பவில்லை. இனி அதற்கான வாய்ப்பும் இல்லை.
இசைஞானியைச் சந்திக்காமலே, அவரைச் சந்தித்ததாகவும் வைரமுத்துவின் பாடலைப் பாட ஒப்புதல் பெற்றுவிட்டதாகவும் சீனு ராமசாமி கூறிக் கொண்டு திரிவதை எந்த மாதிரி எடுத்துக் கொள்வது? இது வைரமுத்துவின் வேலை என்றுதானே எடுத்துக் கொள்ள வேண்டும்? இத்தனை காலம் ராஜா சாருக்கு எதிராக தான் கூட்டணி போட்டு செய்த குழிப் பறிப்பு வேலைகளை அத்தனை சுலபத்தில் மறந்துவிடச் சொல்கிறாரா வைரமுத்து?," என்றனர் கொந்தளிப்புடன்.
இதுகுறித்து சீனுராமசாமியின் விளக்கத்தைக் கேட்க முயன்றோம். ஆனால் அவர் நமது தொடர்பு எல்லைக்கு இன்னும் வரவில்லை!
Post a Comment