சென்னை: இடம் பொருள் ஏவல் படத்தில் வைரமுத்து எழுதிய பாடலை தான் பாடப் போவதாக வந்த செய்திகளை கடுமையாக மறுத்துள்ளார் இசைஞானி இளையராஜா.
சீனு ராமசாமி இயக்கத்தில், லிங்குசாமி தயாரிப்பில் உருவாகும் படம் இடம் பொருள் ஏவல். இதில் விஜய் சேதுபதி, விஷ்ணு நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். ஒரு பாடலை நடிகர் தனுஷ் எழுதியுள்ளார்.
வைரமுத்து பாடல்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைப்பது இதுவே முதல் முறை.
இந்த நிலையில் இடம் பொருள் ஏவல் படத்துக்காக இளையராஜா ஒரு பாடலைப் பாடப் போவதாக செய்தி வெளியானது. உடனே அது வைரமுத்து எழுதிய பாடல்தான் என்ற முடிவுக்கு வந்த மீடியா, பெரிய இடைவெளிக்குப் பிறகு வைரமுத்துவின் பாடலை இளையராஜா தன் குரலில் பாடப் போவதாக செய்திகளை வெளியிட ஆரம்பித்தன.
பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்களிலும் ஆர்வத்தில் ரசிகர்கள் இந்த செய்தியைப் பரப்ப ஆரம்பித்தனர்.
ஆனால் இதனை இசைஞானி இளையராஜா கடுமையாக மறுத்துள்ளார்.
இசைஞானி ஃபேன்ஸ் க்ளப் என்ற அதிகாரப்பூர்வ இணைய தளப் பக்கத்தில் இந்த செய்திக்கு மறுப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுவன் இசையில் இடம் பொருள் ஏவல் படத்தில் இளையராஜா ஒரு பாடல்தான் பாடியிருக்கிறார். அந்தப் பாடலை எழுதியிருப்பவர் நடிகர் தனுஷ். வேறு யார் எழுதிய வரிகளையும் அவர் பாடவில்லை. ரசிகர்கள் தவறான தகவலைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
Post a Comment